மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம் நடத்த முடிவு
அரகண்டநல்லூரில் வேகத்தடை அமைக்கக்கோரி மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம் நடத்த முடிவு
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் உள்ள அரகண்டநல்லூர் மெயின் ரோட்டில் பச்சையம்மன் கோவில் எதிரே 2 தனியார் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஒரு தொழில் பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளன. இந்த 3 கல்வி நிறுவனங்களிலும் சுமார் 3 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பாலம் கட்டும் பணிக்காக இங்குள்ள தனியார் பள்ளியின் எதிரே சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. ஆனால் பாலம் கட்டும்பணி முடிந்த பின்னர் வேகத்தடை அமைக்காததால் அந்த பகுதியில் விபத்துகள் அதிக அளவில் நிகழ்ந்து வருகின்றன. இதுவரை 5-க்கும் மேற்பட்ட விபத்துகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வேகத்தடை அமைக்கக்கோரி வருகிற 22-ந் தேதி மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோர் சாலை மறியல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.