இடை நிற்றலை தவிர்த்துகுழந்தைகள் பள்ளி செல்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு அறிவுரை
கிருஷ்ணகிரி
இடை நிற்றலை தவிர்த்து குழந்தைகள் பள்ளி செல்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் சரயு கூறினார்.
கிராம சபை கூட்டம்
சுதந்திர தின விழாவையொட்டி பர்கூர் ஊராட்சி ஒன்றியம், மஜித்கொல்லஅள்ளி கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். இதில் உதவி கலெக்டர் பாபு, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் பூபதி, வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், பயிற்சி துணை கலெக்டர் தாட்சாயினி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
சுதந்திர தின விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், தூய்மையான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்தும், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல் குறித்தும், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
உதவித்தொகை
செப்டம்பர் 15-ந் தேதி முதல் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பெண்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு புதுமை பெண் திட்டத்தின் கீழ் பெண் உயர் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை பெற்று பெண்கள் தங்களது விருப்பமான கல்வியை கற்று முன்னேற வேண்டும்.
கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பள்ளி இடை நிற்றலை தவிர்த்து அனைவரும் பள்ளிக்கு செல்வதை பெற்றோர்கள் உறுதி செய்திட வேண்டும். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் சரியான நேரத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சமபந்தி விருந்து
தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கண்ணம்பள்ளி வெங்கட்ரமண சாமி, காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், ஓசூர் சந்திர சூடேஸ்வரர், பெரியமுத்தூர் செல்லியம்மன், அகரம் பாலமுருகன், ஊத்தங்கரை காசி விஸ்வநாதர், அனுமன்தீர்த்தம் அனுமந்தீஸ்வரர் என 8 கோவில்களில் சமபந்தி பொது விருந்து நடைபெற்றது. இதில் காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலெக்டர் சரயு பங்கேற்றார்.