சென்னையில் படிக்க பெற்றோர் எதிர்ப்பு: பிளஸ்-2 மாணவி தற்கொலை-நங்கவள்ளி அருகே சோகம்
சென்னையில் படிக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மேச்சேரி:
பட்டப்படிப்பு
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரிய சோரகை பொன்னுசாமி காட்டுவளவு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மகள் பவித்ரா (வயது17). இவர், 12-ம் வகுப்பு முடித்து விட்டு சட்டப்படிப்பு படிக்க முடிவு செய்தார். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அப்போது, பவித்ரா, சென்னையில் சட்டப்படிப்பு படிக்க விரும்பினார்.
அவருடைய பெற்றோர் சேலத்திலோ, நாமக்கல்லிலோ சட்டப்படிப்பு படிக்கலாம். சென்னையில் வேண்டாம் என்று கூறினர். மேலும் சென்னையில் படிக்க எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பவித்ரா மனம் உடைந்து காணப்பட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டின் பின்புறம் உள்ள குளியலறையில் குளிக்க சென்றார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், குளியலறை கதவை தட்டினர். திறக்கப்படவில்லை. உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள ஜன்னல் கம்பியில் பவித்ரா தூக்கில் தொங்கினார்.
அவரை தூக்கிக்கொண்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அவரை பரிசோதனை டாக்டர்கள், பவித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுதொடர்பாக நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சென்னையில் படிக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.