அரசு உதவிபெறும் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்
நெப்பத்தூர் ஊராட்சியில் சேதமடைந்த கட்டிடத்தில் செயல்படும் அரசு உதவி பெறும்பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி சீர்காழி தாசில்தார் அலுவலகம்முன்பு பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
நெப்பத்தூர் ஊராட்சியில் சேதமடைந்த கட்டிடத்தில் செயல்படும் அரசு உதவி பெறும்பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி சீர்காழி தாசில்தார் அலுவலகம்முன்பு பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேதமடைந்த பள்ளி கட்டிடம்
சீர்காழி தாலுகா நெப்பத்தூர் ஊராட்சியில் அக்ரகார தெருவில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தபள்ளி சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பழமையான ஓட்டுக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் நெப்பத்தூர் தீவு கிராமத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் சேதமடைந்து காணப்படுகிறது.பள்ளி கட்டிடம் எந்த நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதால் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் பள்ளி கட்டிடத்தை சீரமைக்காததால் ஆத்திரமடைந்த பெற்றோர் நேற்று சீர்காழி தாசில்தார் அலுவலகத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான ராமசாமி தலைமையில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நெப்பத்தூர் ஊராட்சியில் சேதமடைந்த மீனாட்சி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு பள்ளியை மாற்றவேண்டும். இல்லை என்றால் வருகிற 24-ந் தேதி(வெள்ளிக்கிழமை)சீர்காழி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என கோஷங்கள் எழுப்பினர்.இதனை தொடர்ந்து சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் வழங்கினர். இதனால் சிறிது நேரம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.