மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கும் துறையில் சாதிக்க பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்


மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கும் துறையில் சாதிக்க பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்
x

மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு செய்யும் உயர்கல்வி துறையில் சாதிக்க பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.

தர்மபுரி

மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு செய்யும் உயர்கல்வி துறையில் சாதிக்க பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.

வழிகாட்டும் நிகழ்ச்சி

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேட்டை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பான உயர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தமிழ்நாடு முழுவதும் நான் முதல்வன்- கல்லூரி கனவு நிகழ்ச்சியை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதன்படி இங்கு நடக்கும் நிகழ்ச்சி மாணவ-மாணவிகளின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமையும். மாணவ-மாணவிகள் கல்வியிலும், அறிவாற்றலிலும், படைப்புத்திறனிலும், சமத்துவத்தை கடைபிடிப்பதிலும் மற்றவர்கள் மதிக்கத்தக்க வகையில் செயல்பட வேண்டும்.

தலைமை பண்பு

அனைவரையும் வழி நடத்தும் தலைமை பண்பு கொண்டவர்களாக உயர வேண்டும். தங்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பதை கண்டறிந்து அந்த துறையில் உயர்கல்வியை பெற்று தங்கள் துறையில் சாதனையாளர்களாக உருவெடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த பலர் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக சாதனை படைத்துள்ளனர். நீங்களும் முயற்சித்தால் கண்டிப்பாக உயர்ந்த இடத்தை அடைய முடியும். மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு செய்யும் உயர்கல்வி துறையில் சாதிக்க பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 1,600 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு பல்வேறு துறைகளில் உள்ள உயர் கல்வி வாய்ப்புகள் குறித்து பேராசிரியர்கள் விளக்கி கூறினார்கள்.


Next Story