பிள்ளைகளின் நடவடிக்கையை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்


பிள்ளைகளின் நடவடிக்கையை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பிள்ளைகளின் நடவடிக்கையை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் அரவிந்த் பேசினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பிள்ளைகளின் நடவடிக்கையை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் அரவிந்த் பேசினார்.

மக்கள் தொடர்பு முகாம்

குமரி மாவட்ட வருவாய் துறை சார்பில் விளவங்கோடு வருவாய் தாலுகாவிற்கு உட்பட்ட முழுக்கோடு அரசு தொடக்கப்பள்ளியில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நலத்திட்ட உதவி

கடந்த 16-ந் தேதி நடைபெற்ற முதல் கட்ட மனுநீதி திட்ட முகாமில் பெறப்பட்ட மனுவினை தொடர்ந்து தற்போது 29 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை தலா ரூ.1000 வீதம் வாழ்நாள் முழுவதும் வழங்கும் வகையில் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறையின் சார்பில் 27 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை சான்று, மலைவாழ் மக்களை சார்ந்த 3 நபர்களுக்கு சாதி சான்றிதழ், 7 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா என மொத்தம் 66 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்கள் தெரிந்து பயன்பெற வேண்டும்.

பெற்றோர் கண்காணிக்க வேண்டும்

குமரி மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக மாற்றுவதற்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கடைகளில் பிளாஸ்டிக் பைகளை விற்றால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும். சமூக நலத்துறையின் சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மரக்கன்று

இதைத் தொடர்ந்து, முழுக்கோடு அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வைக்கப்பட்டு இருந்த அரசின் திட்டங்கள் குறித்த விவரங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட கண்காட்சியை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார். பின்னர் பயனாளி ஒருவருக்கு கோ-கோ மர கன்றுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷூலா ஜாண், தனித்துணை கலெக்டர் திருப்பதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, விளவங்கோடு தாசில்தார் பாபு ரமேஷ், தனி தாசில்தார் அனில்குமார், முழுக்கோடு ஊராட்சி தலைவர் மரிய செல்வி விலாசினி, துணைத் தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story