சூரிய கிரகணத்தையொட்டி குமரி கோவில்களில் பரிகார பூஜை முடிந்த பிறகு நடை திறப்ப
சூரிய கிரகணத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பரிகார பூஜைகள் முடிந்த பிறகு நடை திறக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம்,
சூரிய கிரகணத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பரிகார பூஜைகள் முடிந்த பிறகு நடை திறக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சூரிய கிரகணம்
குமரி மாவட்ட கோவில் நிர்வாகத்தின் கீழ் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், வேளிமலை குமாரசாமிகோவில் உட்பட 490 கோவில்கள் உள்ளன.
மேலும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் 644 கோவில்களும், பல்வேறு தனியார் கோவில்களும் இருக்கின்றன. இந்த கோவில்களில் தினமும் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கபட்டு மதியம் 1மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சூரிய கிரகணம் நேற்று மாலை 5 மணி 14 நிமிடத்தில் தொடங்கி 5 மணி 44 நிமிடத்துக்கு முடிந்தது.
கோவில் நடை அடைப்பு
இதையொட்டி மதிய வேளையில் கோவில் நடைகள் அடைக்கப்பட்டது. கிரகணத்தின் பார்வை கோவிலில் உள்ள மூலஸ்தான சாமிகள் மீது விழாத வண்ணம் தர்ப்பை புல் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடைகள் திறக்கப்பட்டன.
சூரியகிரகணத்தால் நடை அடைக்கப்பட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் காத்திருந்து நடை திறந்ததும் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் சித்திரை, சுவாதி, விசாகம், திருவாதிரை, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்யும் வகையில் சூரிய பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபாடும் நடத்தினர்.
திருவட்டார்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத திருவிழா நடந்து வருகிறது. நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கமான பூஜைகள் நடந்தது. வழக்கமாக மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். நேற்று சூரிய கிரகணம் என்பதால், கிரகணத்துக்குப் பின்னர் கோவில் தண்ணீரால் சுத்தப்படுத்தப்பட்டு இரவு 7 மணி அளவில் திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் கருவறையில் இருந்து ஒற்றைக் கல் மண்டபத்துக்கு அர்ச்சனா மூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் சாமி சிலைகள் கருவறைக்கு எடுத்துச் செல்லப் பட்டது. அதன்பிறகு ஒற்றைக் கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
குமார கோவில்
குமாரகோவில், வேளிமலை முருகன் கோவிலில் வழக்கமாக மாலை 5 மணிக்கு நடை திறந்து இரவு 8மணிக்கு நடை அடைக்கப்படும், நேற்று சூரிய கிரகணத்தையொட்டி மாலையில் 5 மணிக்கு பதில் 6.30 மணிக்கே நடை திறக்கப்பட்டது. பின்னர் பரிகார பூஜை நடத்தப்பட்டு சாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு கந்தசஷ்டி விழாவில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு சண்முகநாதர் சன்னதியில் வைத்து காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்,