நகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது
உடுமலை அன்னபூரணி நகரில் உள்ள நகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. நகராட்சி நிர்வாகம் இதை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை
உடுமலை அன்னபூரணி நகரில் உள்ள நகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. நகராட்சி நிர்வாகம் இதை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகராட்சி பூங்கா
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அன்னபூரணி நகரில் நகராட்சி பூங்கா உள்ளது. முன்பு இந்த பூங்காவில் பூஞ்செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளதால் பூங்காவிற்குள் செடிகள், கொடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது.
அத்துடன் பூங்காவிற்குள் குப்பைகளும், பிளாஸ்டி கழிவுகளும் அதிகளவில் கிடக்கிறது. அத்துடன் இந்த பூங்கா வளாகத்திற்குள், அந்த பகுதியில் சேகரமாகும் குப்பைகளை தொட்டியில் கொட்டி வைத்து, அதை மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு 2 தொட்டிகள் கட்டப்பட்டு மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது.
புல் செடிகள்
ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் அந்த பகுதியிலும் புதர் மண்டி கிடக்கிறது. அதனால் அந்த பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உள்ளதாகவும், அவை அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுவதாகவும் கூறப்படுகிறது.
அதனால் இந்த பூங்காவிற்குள் வளர்ந்துள்ள புல் செடிகளை அகற்றி, பூஞ்செடிகளை வளர்த்து நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.