சேதமடைந்த நிலையில் சிறுவர் பூங்கா


சேதமடைந்த நிலையில் சிறுவர் பூங்கா
x

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் சேதமடைந்து காணப்படும் சிறுவர் பூங்காவை சீரமைத்து பறவைகள் சீசன் தொடங்குவதற்கு முன்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் சேதமடைந்து காணப்படும் சிறுவர் பூங்காவை சீரமைத்து பறவைகள் சீசன் தொடங்குவதற்கு முன்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பறவைகள் சரணாலயம்

திருப்பத்தூா் அருகே உள்ளது வேட்டங்குடி. இங்குள்ள கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்தில் சுமார் 40 எக்ேடர் பரப்பளவில் நீர்நிலைகளில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உள்ள இடைப்பட்ட மழைக்காலங்களில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து அடைக்காத்து இனப்பெருக்கத்தை பெருக்கி விட்டு மீண்டும் தனது இருப்பிடத்திற்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆண்டுதோறும் உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட சுமார் 217 வகையான வெளிநாட்டு பறவைகள் மழைக்காலத்தில் இங்கு வருவது வழக்கம்.

கோரிக்கை

இத்தகைய சிறப்பு பெற்ற இந்த சரணாலயத்திற்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தருவது அரசின் தலையாய கடமையாகும். கடந்த காலங்களில் சரணாலயத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததையடுத்து இதுகுறித்து தொடர்ந்து கோரிக்கை வைத்து செய்திகள் வந்த நிலையில் அதன் பின்னர் தார்சாலை போடப்பட்டது.

அடிப்படை வசதிகள்

மேலும் பல்வேறு அடிப்படை வசதிகளையும் செய்ய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது- தற்போது மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருவதால் இங்குள்ள கண்மாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு பின்பு மீண்டும் சீசன் தொடங்குவதால் இங்கு பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

குடும்பத்துடன் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏற்கனவே அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. அவற்றை சீரமைத்து மீண்டும் புதிய பூங்காவாக அமைக்க வேண்டும்.

நடவடிக்கை

மேலும் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு முன்பு பயணிகள் நிழற்குடை அமைத்து டவுன் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சீசன் காலங்களில் இங்குள்ள உயர் மட்ட மேடை பகுதியில் சுற்றுலா பயணிகள் பறவைகளை பார்த்து ரசிக்கும் வகையில் நுண்ணோக்கி கருவிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story