அரை நூற்றாண்டுக்கும் மேலாக புனரமைக்கப்படாத பூங்கா


அரை நூற்றாண்டுக்கும் மேலாக புனரமைக்கப்படாத பூங்கா
x

அமராவதி அணையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக புனரமைக்கப்படாத பூங்காைவ சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர.

திருப்பூர்

அமராவதி அணையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக புனரமைக்கப்படாத பூங்காைவ சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர.

வெண்மேகங்கள் தழுவிச்செல்லும் மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமை நிறைந்த சோலைக்கு நடுவே உற்பத்தியாகி வெண்கீற்றாய் ஆரவாரத்துடன் 2 மலைகளுக்கு இடையே ஓடி வருகின்ற அமராவதி ஆற்றை தடுத்து 1955 -1958 ம் ஆண்டுக்கு இடையிலே 9 கிலோமீட்டர் சுற்றளவில் 90 அடி உயரத்தில் 4 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அமராவதி அணை கட்டப்பட்டது.

சிறுவர் பூங்கா

மேலும் மின் உற்பத்திக்காக சுமார் 2 கே.வி. திறன் கொண்ட நீர்மின் உற்பத்தி நிலையமும், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கடந்த 1958-ம் ஆண்டில் அணையின் முன்புற சரிவை ஒட்டியபடி சுமார் 15 கிலோமீட்டர் பரப்பளவில் இயற்கை அம்சங்களை ஒருங்கே பெற்றவாறு விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா, மின்விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள், இருக்கையுடன் கூடிய நீரூற்று கொண்ட பசுமை குடில்கள், கொடிகள் தவலும் வளைவுகள், மிருகக்காட்சி சாலை, பறவைகளின் குடில் என வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவுக்கு மனதை கொள்ளை கொள்ளும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டது.

எவ்வித வளர்ச்சி, தொலைதொடர்பு, போக்குவரத்து, சொந்த வாகன வசதி இல்லாத அந்த காலகட்டத்தில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பண்டிகை காலங்களில் மாட்டு வண்டி, சைக்கிளில் வந்து பூங்காவில் சற்று தங்கி இளைப்பாரிச்சென்றனர். இதனால் அதில் பெரிதளவில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை.

சுற்றுலா தளம்

காலங்கள் மாற மாற காட்சிகளும் மாறியது. அடிப்படை வசதி, போக்குவரத்து, விஞ்ஞானம், தொலைத்தொடர்பு வசதி விண்ணை எட்டியது. மலையளவு உலகத்தை மடித்து வைக்கும் கைபேசி மற்றும் லேப்டாப்பில் வைத்து பார்க்க இணையதளம் உதவியது.

துறை சார்ந்த நிகழ்வுகள் அதில் பதிவேற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டதன் விளைவால் சுற்றுலாவும் வளர்ச்சி அடைந்தது. இயற்கையின் அழகுகளை புகைப்படம் மற்றும் வீடியோவாக இணையத்தில் கண்ட மனம் அதில் லயித்துப்போய் நேரில் காணும் ஆசைக்கு தள்ளப்பட்டது. ஓயாமல் ஓடி ஓடி உழைத்து ஓய்வின்றி தவித்த எந்திரத்தனமான உடலுக்கு ஓய்வு கொடுக்க உற்றார், உறவினர்கள், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சென்று ஓய்வெடுக்கும் இடமாக சுற்றுலா தளங்கள் மாறியது.

பராமரிப்பு இல்்லை

அதில் மலையும் மலை சார்ந்த அணைகளை பின்னணியாக கொண்ட அமையப்பெற்ற பகுதியே முதல் தேர்வாக உள்ளது. சில்லென்ற நறுமணம் கலந்த காற்று, பசுமை நிறைந்த சோலை, பறவைகளின் கூக்குரல், மலைகளை தழுவும் மேகம், திகிலுடன் கூடிய படகு சவாரி என இயற்கையுடன் இணைந்த பொழுதுபோக்கே அதற்கு காரணமாகும். ஆனால் மக்கள் வருகைக்கு ஏற்றவாறு பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவது தொடர் கதையாக உள்ளது.

அந்த வகையில் உடுமலையில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அமராவதி அணை பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி தன் சுய பொழிவை இழந்து காணப்படுகிறது.

இதனால் பல்வேறு கனவுகளோடும் ஆசையோடும் குடும்பம் குடும்பமாக பல ஆயிரங்கள் பொருட்செலவில் சுற்றுலா பயணிகள் நிம்மதியை தேடி வந்து அதை தொலைத்துச்செல்லும் நிலையே உள்ளது.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளை கடந்தும் அதை முழுமையாக புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்காததால் காட்சி பொருளாகவும், சமூகவிரோதிகளின் கூடாரமாகவும், விசஜந்துக்கள் நடமாட்டம் நிறைந்தும் காணப்படுகிறது.

சிறுவர் பூங்காவும் அங்கு அமைக்கப்பட்ட உபகரணங்களும் அதில் உள்ள சிலைகளும் சேதம் அடைந்து விட்டது. அணை உருவானதன் நினைவாக அமைக்கப்பட்ட கல்தூண் கம்பீரத்தை இழந்து நிற்கும் திறனை இழந்து வருகிறது.

பசுமை குடில் வறண்டும் இருக்கைகள் சிதைந்தும் மனம் வெறுக்கும் குடிலாக உள்ளது. பூங்காவில் அமைக்கப்பட்ட சிலைகள் தன் சுய உருவை இழந்து உருதெரியாமல் அரைகுறை மேனியுடன் காட்சி அளிக்கிறது.

செயற்கை நீரூற்றுகள் அதில் உள்ள மின்விளக்குகளுடன் சேர்ந்து சிதைந்து குப்பை தொட்டியாக மாறி வருகிறது. இயற்கை உபாதைகளை கழிக்க இடமும் இல்லை. மனதை குதூகலப்படுத்தும் சூழலும் இல்லை. மொத்தத்தில் சுற்றுலா பயணிகள் வெறுப்பை உமிழும் இடமாகவே அமராவதி அணை பூங்கா மாறிவிட்டது.

அதைத் தொடர்ந்து பூங்காவை மேம்படுத்தி அழகுபடுத்தும் விதமாக பொதுப்பணித்துறை, நீர்வளஆதாரத்துறை சார்பில் சுமார் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் இன்று வரையிலும் அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அரசும் அதிகாரிகளும் முன் வரவில்லை.

இதனால் பூங்கா என்று ஒன்று இருந்ததே அடையாளம் தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகளும் பெருமைகளும் 2 தலை முறைகளையும் கண்ட பாரம்பரியம் மிக்க அமராவதிஅணை பூங்காவை புனரமைத்து பொலிவு பெறச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Related Tags :
Next Story