அலங்கோலமாக காட்சியளிக்கும் அழகான அமராவதி அணை பூங்கா


அலங்கோலமாக காட்சியளிக்கும் அழகான அமராவதி அணை பூங்கா
x
திருப்பூர்

இன்றைய நவநாகரீக உலகில் மனிதனுக்கு நிற்க நேரமேது. 24 மணி நேரமும் பணம், பணம் என்று ஓடிக்கொண்டிருக்கிறான். அவனுடைய ஆசை அளவில்லாமல் போனது. கையளவு உள்ளத்திற்கு கடல்போல் ஆசை. இந்த ஆசை அதிகமாக, அதிகமாக அவனுக்கு மன அழுத்தம் உருவாகி ெமாத்தத்தில் ஓரமாக ஒடுங்கி விழுந்து விடுகிறான். இதில் இருந்து விடுபடவும், மன அழுத்தம் குறையவும் பொழுதுப்போக்கு அம்சமே நிலையான மருந்து. அதற்காக ஜம்மு காஷ்மீர், இமயமலை அடிவாரம், சிம்லா செல்ல வேண்டியது இல்லை. சுவீஸ் போக வேண்டிய தேவையும் ஏற்படாது. நம் உள்ளூரில் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் சுற்றுலா தலங்கள் நம்மை வரவேற்க காத்திருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை மலைவளம், நீர்வளம், நிலவளம் கொண்ட புண்ணிய பூமியாகும். இங்கு அமரலோக நதி என்று போற்றப்படும் அமராவதி ஆறு, தென்கைலாயம் என பெயர் பெற்ற பசுமைமாறா வனப்பகுதியில் உற்பத்தியாகி நகரின் மையப்பகுதியை வளமாக்கி செல்லும் ஜீவநதியாம் நொய்யல் பாய்கிறது. கண்ணுக்கு விருந்து பசுமைதானே. அந்த பசுமையை பார்க்கும் இடமெல்லாம் காட்டும் நெல் வயல்கள். ஓயாமல் ஓடி ஓடி உழைத்து ஓய்வின்றி தவித்த எந்திரத்தனமான உடலுக்கு ஓய்வு கொடுக்க உற்றார், உறவினர்கள், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சென்று ஓய்வெடுக்கும் இடமாக சுற்றுலா தலங்கள் மாறியது. அதில் மலையும் மலை சார்ந்த அணைகளை பின்னணியாக கொண்டு அமையப்பெற்ற பகுதியே முதல் தேர்வாக உள்ளது. சில்லென்ற நறுமணம் கலந்த காற்று, பசுமை நிறைந்த சோலை, பறவைகளின் கூக்குரல், மலைகளை தழுவும் மேகம், திகிலுடன் கூடிய படகு சவாரி என இயற்கையுடன் இணைந்த பொழுதுப்போக்கே அதற்கு காரணமாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமை நிறைந்த சோலைக்கு நடுவே உற்பத்தியாகி வெண்கீற்றாய் ஆரவாரத்துடன் ஓடி வருகின்ற அமராவதி ஆற்றை தடுத்து இரண்டு மலைகளை இணைத்து 1955-1958-ம் ஆண்டுக்கு இடையில் 9 கிலோமீட்டர் சுற்றளவில் 90 அடி உயரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டது. கூடவே மின் உற்பத்திக்கு ஏதுவாக இரண்டு கே.வி.ஏ. திறன் கொண்ட நீர்மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்பட்டது.

பசுமை குடில்கள்

அது மட்டுமா சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அணையின் முன்புற சரிவை ஒட்டியபடி சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் இயற்கை அம்சங்களை ஒருங்கே பெற்றவாறு விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர்பூங்கா, மின்விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள், இருக்கையுடன் கூடிய நீரூற்றை கொண்ட பசுமை குடில்கள், கொடிகள் தவழும் வளைவுகள், மிருகக்காட்சி சாலை, பறவைகள் குடில், மிருக காட்சியகம் என வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவுக்கு மனதை கொள்ளை கொள்ளும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டது.

அன்று எவ்வித வளர்ச்சி, தொலைதொடர்பு, போக்குவரத்து, வாகன வசதி இல்லாத அந்த காலகட்டத்தில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பண்டிகை காலங்களில் மாட்டு வண்டி, சைக்கிளில் வந்து பூங்காவில் சற்று தங்கி இளைப்பாரி சென்றனர். ஆனால் மக்கள் வருகைக்கு ஏற்ப பூங்காக்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவது தொடர் கதையாக உள்ளது.

பராமரிப்பு இல்லை

அந்த வகையில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் உடுமலையில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அமராவதி அணை பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி தன் சுய பொலிவை இழந்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு கனவுகளோடும் ஆசையோடும் குடும்பம் குடும்பமாக நிம்மதியை தேடி வந்து, அதை தொலைத்துச் செல்லும் நிலையே உள்ளது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளை கடந்தும் அதை முழுமையாக புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்காததால் காட்சி பொருளாகவும் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் நிறைந்தும் காணப்படுகிறது. சிறுவர் பூங்காவும் அங்கு அமைக்கப்பட்ட உபகரணங்களும் அதில் உள்ள சிலைகளை போன்றே சேதம் அடைந்து விட்டது.

அணை உருவானதன் நினைவாக அமைக்கப்பட்ட கல்தூண் கம்பீரத்தை இழந்து நிற்கும் திறனை இழந்து வருகிறது. பசுமை குடில் வறண்டு, இருக்கைகள் சிதைந்து மனம் வெறுக்கும் குடிலாக உள்ளது. பூங்காவில் அமைக்கப்பட்ட சிலைகள் தன் சுய உருவை இழந்து உரு தெரியாமல் அரைகுறை மேனியுடன் காட்சி அளிக்கிறது.செயற்கை நீரூற்றுகள் அதில் உள்ள மின்விளக்குகளுடன் சேர்ந்து சிதைந்து குப்பை தொட்டியாக மாறி வருகிறது. இயற்கை உபாதைகளை கழிக்க இடமும் இல்லை.

கருத்துரு

மொத்தத்தில் சுற்றுலா பயணிகள் வெறுப்பை உமிழும் இடமாகவே அமராவதி அணை பூங்கா மாறிவிட்டது. அதைத் தொடர்ந்து பூங்காவை மேம்படுத்தி அழகு படுத்தும் விதமாக பொதுப்பணித்துறை, நீர்வளஆதாரத்துறை சார்பில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் இன்று வரையிலும் அதை பரிசளித்து நடவடிக்கை எடுக்க அரசும் அதிகாரிகளும் முன் வரவில்லை. இதனால் பூங்கா என்று ஒன்று இருந்ததே அடையாளம் தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.பல்வேறு சிறப்புகளும் பெருமைகளும் கொண்ட பாரம்பரியம் மிக்க அமராவதி அணை பூங்காவை மேம்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ராஜாராம் (உடுமலை):-

இயற்கை எழில் சூழ்ந்த அமராவதி அணையின் அழகை பார்வையிட வரும் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த கழிப்பிட வசதி இல்லை. பூங்கா ஆகியவை முறையாக பராமரிக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன் சிறுவர் சிறுமியர் விளையாட்டு பூங்காக்களை பராமரித்து சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில்குமார் (உடுமலை):-

வாளவாடி அமராவதி அணையில் கடந்த 50 ஆண்டுகளாக சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தபடாமல் உள்ளது. அணையின் முகப்பில் சேதம் அடைந்து உள்ள பழமை வாய்ந்த சிலைகளை சீரமைத்து புதுப்பொலிவு அடையச் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தோடு சுற்றுலா வருகின்ற பயணிகள் பாதுகாப்பான முறையில் விடுமுறையை களிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.


Next Story