உடுமலை நகராட்சி பூங்காவில்பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள்


உடுமலை நகராட்சி பூங்காவில்பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள்
x
திருப்பூர்


உடுமலை நகராட்சி பூங்காவில் பாதியில் நிறுத்தப்பட்ட மீண்டும் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நகராட்சி பூங்கா

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ராஜேந்திரா சாலையில் நகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி சேதமடைந்து வந்தது. அதுமட்டுமின்றி விஷஜந்துக்கள் நடமாட்டமும் அதிகரித்தும் போதை ஆசாமிகளின் புகலிடமாகவும் விளங்கியது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் அதை பயன்படுத்த முடியாத சூழல் நிலவியது. அதைத் தொடர்ந்து பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூங்காவில் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டது.அதிகாரிகள் அலட்சியம் காரணமாக அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

கிடப்பில் பணிகள்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் எந்திரத்தனமான வாழ்க்கைக்கு மத்தியில் சற்றே ஓய்வெடுத்து புத்துணர்வு பெறுவதற்கு ஏதுவாக பூங்கா அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மாலை வேளையிலும் வார மற்றும் பொது விடுமுறை நாட்களில் பூங்காவில் அமர்ந்து புத்துணர்வும் பெற்றும் வந்தனர். இந்த நிலையில் பூங்காவில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அங்கு புதர் மண்டி விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்ததுடன் போதை ஆசாமிகளின் புகலிடமாகவும் மாறியது.

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் பூங்கா சீரமைப்பு பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆரம்பம் என்னவோ நல்லாதான் இருக்கு ஆனா முடிவு சரி இல்ல என்பது போல பராமரிப்பு பணி தற்போது தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அங்கு பொருத்துவதற்காக போடப்பட்டுள்ள உபகரணங்களும் இயற்கை சீற்றத்தால் சேதம் அடையும் சூழல் உள்ளது.

புதுப்பிக்கப்படுமா?

நகராட்சி பகுதியில் தொடங்கப்பட்டுள்ள எந்த ஒரு பணியும் முழுமையாக முடிக்காமல் அரை குறையாகவே உள்ளது. இதற்கு பூங்கா பணி கிடப்பில் போடப்பட்டது சான்று.

இதனால் பூங்கா பழைய படிக்கு புதுப்பித்து நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்து உள்ளது. எனவே ராஜேந்திர சாலையில் உள்ள நகராட்சி பூங்காவை விரைந்து சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story