பூங்கா பராமரிப்பு பணி


பூங்கா பராமரிப்பு பணி
x

பூங்கா பராமரிப்பு பணி

திருப்பூர்

தளி,

அமராவதி அணைப்பகுதியில் உள்ள பூங்கா பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பூங்கா

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் நிறைந்த ரம்மியமான சூழலில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு முன்பு ராக்கார்டன், பூங்கா, படகுசவாரி, அணையில் இருந்து சற்று தொலைவில் முதலைப்பண்ணை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் உள்ளது. இதனால் உடுமலை பகுதியின் சிறந்த சுற்றுலா தலமாக அமராவதி அணை விளங்கி வருகிறது. இங்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் எந்திரத்தனமான வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்து குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு மனதையும் உடலையும் புத்துணர்வு பெறச் செய்யவே வருகின்றனர்.

ஆனால் இவை அனைத்தும் சாத்தியமாகும் இடமாக இருந்த அமராவதிஅணை பூங்கா பகுதி முறையற்ற பராமரிப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வெறுத்து ஒதுக்கும் இடமாக மாறியது. மேலும் புதர் மண்டி விஷ ஜந்துக்களின் புகலிடமாகவும் மர்ம ஆசாமிகள் மது அருந்தும் கூடாரமாகவும் மாறியது. அத்துடன் ஆங்காங்கே அமைக்கப்பட்ட அலங்கார வளைவுகள் இருக்கைகள் சேதமடைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்தும் குறைந்து காணப்பட்டது. இதையடுத்து பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பராமரிப்பு பணி

அதைத்தொடர்ந்து அணைக்கு முன்பு உள்ள பூங்கா பகுதியை பராமரிக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன் முதற்கட்டமாக பூங்காவில் முளைத்துள்ள முற்செடிகள் சீமைகருவேலான் மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இதனால் புதர் மண்டியுள்ள பூங்கா புதுப்பொலிவு பெறுவதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் பூங்கா பகுதியில் பெண்கள் குழந்தைகள் பயன்பெறும் வகையில் சுகாதாரவளாகம் அமைக்கப்படாததால் இயற்கை உபாதைகளை கழிக்கச் செல்லும் அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலை வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் பூங்காவை பராமரிப்பதற்கும் சுகாதார வளாகம் அமைத்து தருவதற்கு முன் வரவில்லை. எனவே அமராவதி அணைக்கு பகுதியில் உள்ள பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ள அதிகாரிகள் அங்கு சுற்றுலா பயணிகள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு ஏதுவாக சுகாதார வளாகம் அமைத்து தருவதற்கும் அலங்கார வளைவுகள், நீரூற்று மற்றும் இருக்கைகளை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.




Next Story