புல்வெளிகளை பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரம்
ஊட்டியில் பனிப்பொழிவு தொடர்கிறது. இதனால் பூங்காக்களில் புல்வெளிகள் கருகாமல் தடுக்க ‘ஸ்பிரிங்லர்’ மூலம் ஊழியர்கள் தண்ணீர் தெளித்து பாதுகாத்து வருகின்றனர்.
ஊட்டி
ஊட்டியில் பனிப்பொழிவு தொடர்கிறது. இதனால் பூங்காக்களில் புல்வெளிகள் கருகாமல் தடுக்க 'ஸ்பிரிங்லர்' மூலம் ஊழியர்கள் தண்ணீர் தெளித்து பாதுகாத்து வருகின்றனர்.
பனிப்பொழிவு
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் உறைபனி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக 20 நாட்கள் கழித்து தொடங்கியது. அதன்பின்னர் மழை பெய்ததால் உறைபனி நின்றனர். ஆனாலும் ஒரு மாதம் கழித்து மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து உறைபனி கொட்டி தீர்த்தது. ஊட்டியில் குறைந்தபட்சமாக ஒரு டிகிரி செல்சியசும், அவலாஞ்சியில் குறைந்தபட்சமாக மைனஸ் 4 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவானது. மேலும் ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகள், அணைகள், நீரோடைகள் போன்ற பகுதிகளில் செடி, கொடிகள் மற்றும் புற்கள் பனியில் கருகின. இது தவிர தேயிலை தோட்டங்களும் கடும் பாதிப்பு அடைந்தன.
தண்ணீர் தெளிப்பு
இதற்கிடையில் பனி பாதிப்பு குறைந்தாலும், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த பனியில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானத்தில் உள்ள புற்கள் கருகி விடும். இதனை தடுக்க ஸ்பிரிங்லர் மற்றும் பாப்-அப் முறையில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள், பாத்திகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் கருகாமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு உள்ளது.
கருகாமல் இருக்க...
எனினும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இந்த மலர் செடிகள் கருகிவிடாமல் இருக்க நாள்தோறும் ஊழியர்கள் குழாய்களின் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்திற்கு பனி நீடிக்கும் எனவும், அதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக கையாளவும் பூங்கா ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.