பர்கூர் கிழக்கு மலைப்பகுதியில் தொடர் மழையால் தற்காலிக சாலையில் மண் அரிப்பு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கிராமமக்கள் அவதி
போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கிராமமக்கள் அவதி
பர்கூர் கிழக்கு மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் தற்காலிக சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.
போக்குவரத்து நிறுத்தம்
அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலைப்பகுதியில் உள்ள தாமரைகரை-மடம் சாலையில் ஈரெட்டி மற்றும் தேவர் மலை ஓடை உள்ளது. தற்போது இந்த ஓடைக்கு அரசு மூலம் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் வாகனங்கள் சென்று வர தற்காலிகமாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையில் அந்தியூரில் இருந்து மடம் வரை 2 பஸ்கள் தினமும் சென்று வந்தன. இந்த நிலையில் கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது கடந்த ஒரு வாரமாக அந்த 2 பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளது.
கிராமமக்கள் அவதி
கடந்த ஒரு வாரமாக பஸ் மற்றும் லாரிகள், வேன்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மடம் வரை உள்ள 9 கிராம பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஓடையின் மீது கட்டப்பட்ட பாலத்தை சரி செய்து கொடுத்து போக்குவரத்து நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.