பகுதிநேர ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும்
மின்வாரியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏலகிரி மலையில் தமிழ்நாடு மின் ஊழல் மத்திய அமைப்பு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் திட்ட செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். பொது செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் வெங்கடேசன், துணை பொது செயலாளர்கள் ரவிச்சந்திரன், பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மண்டல செயலாளர் கோவிந்தராஜ், மாநில துணைத்தலைவர் ஜோதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் மின்வாரியத்தில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும், பகுதி நேர பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவசீலன் நன்றி கூறினார்.