சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் கட்சி நிர்வாகிகள் திடீர் வாக்குவாதம்
கரும்பு அரவை தொடக்க விழாவில் சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் கட்சி நிர்வாகிகள் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் மூங்கில்துறைப்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மூங்கில்துறைப்பட்டு
தொடக்க விழா
மூங்கில்துறைப்பட்டில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1-ல் 2022-23-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பணி தொடக்க விழா நேற்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இதற்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் ஆலை நிர்வாகம் அழைப்பிதழ் வழங்கியது.
இந்த நிலையில் அரவைப் பணி தொடங்குவதற்காக ஆலைவளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கரும்பு அரவை தொடக்க விழா ஆரம்பமானது.
வாக்குவாதம்
அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் சர்க்கரை ஆலை மேலாண்மை அலுவலர் முருகேசனிடம் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவரின் பெயரை அழைப்பிதழில் ஏன் போடவில்லை? என்று கேள்வி எழுப்பிய போது அங்கு சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து பா.ம.க.வை சேர்ந்த நிர்வாகிகள் எங்களுக்கு முறையான அழைப்பு விடுக்கவில்லை என்றும், நாங்கள் ஆலைக்கு கரும்புகள் அனுப்புவதில்லையா? என்று அதிகாரிகளிடம் கேட்டு வாக்குகுவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மூங்கில்துறைப்பட்டு போலீசார் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., பா.ம.க. கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். கரும்பு அரவை தொடக்க விழாவில் சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் கட்சி நிர்வாகிகள் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் மூங்கில்துறைப்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.