அடுத்த கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் அடுத்த கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற முதன்மைக்கல்வி அதிகாரி முருகன் கூறினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் அடுத்த கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற முதன்மைக்கல்வி அதிகாரி முருகன் கூறினார்.
புதிய முதன்மைக்கல்வி அதிகாரி
குமரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணியாற்றியவர் புகழேந்தி. இவர் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி முருகன் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று முருகன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு முதன்மைக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் சுரேஷ்பாபு, கல்வி மாவட்ட அதிகாரிகள், முதன்மைக்கல்வி அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் முதன்மைக்கல்வி அதிகாரி முருகன், கலெக்டர் பி.என்.ஸ்ரீதரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை
பொறுப்பேற்றதும் முதன்மைக்கல்வி அதிகாரி முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிளஸ்-2 தேர்வை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 22,386 பேர் எழுதினர். அவர்களில் 21,725 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 97.05 ஆகும். கடந்த ஆண்டு குமரி மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் தமிழக அளவில் 14-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதின் காரணமாக 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அரசு பள்ளி அளவில் கடந்த ஆண்டு குமரி மாவட்டம் 10-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அடுத்த கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.