ஆம்னி பஸ் ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதம்
தாமதமாக வந்து சேர்ந்ததால் ஆம்னி பஸ் ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதம்
குழித்துறை,
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரு தனியார் ஆம்னி பஸ் மார்த்தாண்டம் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ் சென்னையில் இருந்து தாமதமாக புறப்பட்டதாக பயணிகள் சிலர் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் அந்த பஸ் மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயன்குழியை வந்தடைந்தது. தொடர்ந்து பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் தாமதமாக வந்து சேர்ந்ததாக கூறி ஆம்னி பஸ் ஊழியர்களிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள கடை வியாபாரிகளும் பஸ் ஊழியர்களுக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே சிறிய அளவில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து பயணிகள் சிலர் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பயணிகளுக்கும், பஸ் ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து அனைவரையும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.