வடமாநில ரெயில்கள் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் வட மாநில ரெயில்கள் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
ரெயில் நிலையம்
மதுரை கோட்ட ரெயில்வேயில் பழமையான ரெயில் நிலையமாக புதுக்கோட்டை உள்ளது. புதுக்கோட்டை ரெயில் நிலையம் வழியாக சென்னை, ராமேசுவரம், காரைக்குடி, கோவை, செங்கோட்டை, செகந்திராபாத், புவனேஸ்வர் உள்ளிட்ட ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் கொரோனா ஊரடங்கிற்கு பின் ரெயில் சேவை முழுமையாக தொடங்கிய பின் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வருவாய் அதிகரித்துள்ளது. மேலும் பயணிகள் வந்து செல்லும் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது. ரெயில் நிலையத்தில் மேலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வடமாநில ரெயில்கள்
இந்த நிலையில் புதுக்கோட்டை வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் சில ரெயில்கள் புதுக்கோட்டையில் நின்று செல்லாமல் போவதால், அதனையும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பயணிகள் கூறுகையில், ''பனராஸ்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் புதுக்கோட்டையில் நின்று செல்கிறது. ராமேசுவரத்தில் இருந்து பனராஸ் புறப்பட்டு செல்லும் போது வியாழன், திங்கட்கிழமைகளில் அதிகாலை 4.30 மணிக்கு புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நிற்காமல் கடந்து செல்கிறது.
இதேபோல ராமேசுவரம்-அயோத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் நிற்காமல் செல்கிறது. ராமேசுவரம்-அஜ்மீர்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நிற்பதில்லை. புதுக்கோட்டை வழியை கடந்து வடமாநிலத்திற்கு செல்லும் மேற்கண்ட இந்த ரெயில்கள் நின்று சென்றால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்'' என்றனர். வடமாநில ரெயில்கள் அனைத்தும் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.