வடமாநில தொழிலாளர்கள் துணி துவைத்து, குளித்ததால் பயணிகள் அதிருப்தி
விழுப்புரம் ரெயில் நிலைய நடைமேடையில் வடமாநில தொழிலாளர்கள் துணி துவைத்து, குளித்ததால் பயணிகள் அதிருப்தியடைந்தனர். இதுசம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடைமேடையில் குளித்த தொழிலாளர்கள்
தமிழகத்தின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றாக விழுப்புரம் ரெயில் நிலையம் விளங்கி வருகிறது. இந்த ரெயில் நிலையத்திற்கு 117 ரெயில்கள் வந்து செல்கின்றன. ரெயில் பயணத்திற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அதில் விழுப்புரம் ரெயில் நிலைய நடைமேடையில் வடமாநில தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ரெயில் பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் குழாய்கள் மூலம் பக்கெட்டுகளில் தண்ணீரை பிடித்து குளித்து வருகின்றனர்.
பயணிகள் அதிருப்தி
அதுமட்டுமின்றி சிலர் ரெயில்வே நடைமேடை என்றும் பாராமல் அங்கேயே துணிகளை சோப்பு போட்டு துவைத்து அலசி கொடிகட்டி வெயிலில் காய வைத்துள்ளனர். இதை விழுப்புரம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற ரெயிலில் பயணம் செய்த பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவலை தளங்களில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ பயணிகள் மத்தியில் அதிருப்தியையும், முகம் சுழிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
இதுபற்றி பயணிகள் தரப்பில் கேட்டபோது, வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய வாராந்திர ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையம் வரும்போது இங்கு ½ மணி நேரம் வரை நிறுத்தப்படுகிறது. அந்த சமயத்தில் வடமாநில தொழிலாளர்கள் பலர், ரெயில் நிலையம் என்றும், ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இடம் என்றும்பாராமல் தங்கள் வீட்டைப்போல் துணி வைத்து குளித்து வருவது எந்த விதத்தில் நியாயம், ரெயில்வே அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட்டாலும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து ரெயில்வே காவல்துறை, ரெயில்வே பாதுகாப்பு படை வட்டாரத்தில் கேட்டபோது, ராமேஸ்வரத்தில் இருந்து வடமாநிலத்திற்கு அந்த ரெயில் சென்றுள்ளது. 3-வது நடைமேடையில் அந்த ரெயில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதில் பயணித்த வடமாநிலத்தினர், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்கவும், பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் உரிய கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும் என்றனர்.