கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் சேதமடைந்து காணப்படும் பயணிகள் குளிர்சாதன நிழற்குடை பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் காத்திருப்பு


கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் சேதமடைந்து காணப்படும் பயணிகள் குளிர்சாதன நிழற்குடை பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் காத்திருப்பு
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் பயணிகள் குளிர்சாதன நிழற்குடை சேதமடைந்து பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் நிலை உள்ளது.

கடலூர்

கடலூர் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் உள்ளது. அதன்படி கடந்த 2015-2016-ம் ஆண்டு, கடலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவில், குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் நிழற்குடையை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது, பஸ் போக்குவரத்து இல்லாத இடத்தில், அதுவும் ஒரு வழிபாதையில் தெற்கு புறம் பயணிகள் நிழற்குடை அமைக்கக்கூடாது என்றும், பயணிகள் அதிகம் வந்து செல்லும் ஆல்பேட்டை சோதனைச்சாவடி அல்லது வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மது அருந்தும் இடமாக...

இருப்பினும் அந்த இடத்திலேயே குளிர்சாதன வசதியுடன் பயணிகள் நிழற்குடை அமைத்து திறக்கப்பட்டது. ஆனால் திறந்து 1 மாதம் கூட சரியாக இயங்கவில்லை. அதற்குள் அதில் இருந்த குளிரூட்டும் எந்திரத்தை (ஏ.சி.) காணவில்லை. படிப்படியாக அதில் இருந்த நாற்காலிகள் உடைக்கப்பட்டன. நாளடைவில் அதில் இருந்த நாற்காலிகளும் காணாமல் போய் விட்டது.

மாலை, இரவு நேரங்களில் மதுபிரியர்கள் அமர்ந்து மது குடிக்கும் பாராக உள்ளது. இதனால் அந்த இடம் சுகாதார வசதியின்றி மோசமாக உள்ளது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், நிழற்குடைக்குள் செல்லாமல் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் காத்திருந்து பெரும் சிரமங்களுக்கிடையே பஸ்களில் ஏறி சென்று வருகிறார்கள்.

நடவடிக்கை தேவை

ஆகவே பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் இருக்கும், இந்த பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு, அதற்கு எதிராக கும்தாமேடு பாலத்திற்கு அருகில் அமைத்தால், செம்மண்டலம் வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். ஆகவே பயணிகள் நிழற்குடை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story