சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்


சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்
x

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். ரெயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது.

திருச்சி

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். ரெயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகை

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகை வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக வெளியூரில் தங்கி படித்து வரும் மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், வெளியூர்களில் வியாபாரம் செய்பவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கினர்.

பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம்

திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலையத்தில் நேற்று இரவு பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. திருச்சியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குடும்பம், குடும்பமாக பஸ் நிலையத்துக்கு படையெடுத்து வந்தனர். இதனால் மத்திய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.

மேலும், தீபாவளி பண்டிகையொட்டி திருச்சியில் மன்னார்புரம், வில்லியம்ஸ் சாலையில் அமைக்கப்பட்ட தற்காலிக பஸ்நிலையங்களிலும் பயணிகள் அதிகமாக குவிந்து இருந்தனர். இதேபோல் ரெயில் நிலையத்திலும் நேற்று காலை முதலே பயணிகள் கூட்டம் அலைமோதியது. திருச்சி வழியாக சென்ற அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகள், முன்பதிவில்லா பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

போக்குவரத்துக்கு இடையூறாக...

முன்னதாக போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மன்னார்புரத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பஸ்நிலையத்தில் போக்குவரத்தை தொடங்கி வைத்து கூறியதாவது:-

தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தை கொண்டும் எவ்வித வாகனங்களையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது. பஸ்களை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்ற வேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி, ஏற்றக்கூடாது. வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்தவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும் நிறுத்தக் கூடாது. வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக்கூடாது. பட்டாசு வியாபாரம் செய்பவர்கள், அனுமதி பெற்ற இடத்தில் மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும். தரைக்கடை மற்றும் தள்ளுவண்டியில் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது. இந்த விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது பற்றிய தகவலை போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கும் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வாட்ஸ் அப் எண் 96262-73399-க்கும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story