சேலம் புதிய பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் அல்லல்படும் பயணிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சேலம் புதிய பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அல்லல்படுகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்,
புதிய பஸ் நிலையம்
சேலம் மாநகரின் மையப்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பெயரில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் மாநிலம் முழுவதும் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, புதுச்சேரிக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இங்கு 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். புதிய பஸ் நிலையத்தில் மொத்தம் 4 நடைமேடைகள் உள்ளன. ஒவ்வொரு நடைமேடை பகுதியில் இருந்தும் குறிப்பிட்ட இடத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் இந்த பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
தள்ளுவண்டி வியாபாரம்
இந்த நிலையில் பஸ் நிலையத்தில் சில குறைபாடுகள் பயணிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. பெரும்பாலும் பஸ் நிலையங்களில் வெளிப்புற பகுதிகளில் தான் தள்ளுவண்டிகளில் வைத்து வியாபாரம் செய்யப்படுவதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு பஸ்கள் வந்து செல்லும் பகுதியில் சிலர் தள்ளுவண்டிகளில் கம்மங்கூழ் கடை போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் பஸ் டிரைவர்கள் தங்களது வாகனங்களை திருப்புவதற்கு சிரமப்படுகின்றனர்.
இதனால் பஸ் நிலையத்தில் சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் உறவினர்களை பஸ்களில் ஏற்றி விடுவதற்காக மோட்டார் சைக்கிள்களில் வருபவர்களில் பலர் அவற்றை நடைமேடை பகுதியில் பஸ்கள் வந்து நிற்கும் இடத்தையொட்டி நிறுத்துகின்றனர். இதுதவிர சிலர் நடைமேடையிலேயே வாகனங்களை ஏற்றி நிறுத்தி விடுகின்றனர். இதனாலும் பஸ் நிலையத்திற்குள் நெரிசல் ஏற்படுகிறது.
கடைகள்
நடைமேடை இருப்பது தெரியாத அளவிற்கு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. 2 மற்றும் 3-வது நடைமேடைகளின் இருபுறங்களிலும் வழிநெடுகிலும் பழக்கடைகள், சாப்பாடு கடைகள், தின்பண்ட கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக செருப்புகள் மலைபோல் குவிக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது. இதனால் நடைமேடைகளில் பயணிகள் உட்கார மற்றும் நிற்க கூட முடியாத அளவிற்கு கடைகள் உள்ளன.
மேலும் நடைமேடைகளில் குப்பை கூடைகள் அதிகளவு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் சில குப்பை கூடைகள் உடைந்து குப்பைகள் கீழே கொட்டி கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் ஒரு சில இடங்களில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அல்லல்படுகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---
பிளாட்பார கடைகள் ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை வேண்டும்- பயணிகள் கருத்து
இதுகுறித்து சென்னயை சேர்ந்த அபினேஷ் என்ற பயணி கூறும் போது, 'பெரும்பாலான பஸ் நிலையங்களில் இதுபோன்ற கடைகள் நடைமேடைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு பயணிகள் நின்று பஸ்களில் ஏற முடியாத அளவுக்கு கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் சிரமம் ஏற்படுகிறது. தாங்கள் செல்லும் பஸ் வந்தால் கூட உடனடியாக சென்று ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நடைமேடைகளில் உள்ள கடைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
தொப்பூரை சேர்ந்த மாரியப்பன் என்ற பயணி கூறும் போது, 'பஸ் நிலையத்திற்குள் ஆண்களுக்கென திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடம் உள்ளது. ஆனால் இதற்காக கட்டப்பட்டு உள்ள தடுப்பு சுவரின் உயரம் குறைவாக உள்ளதால் பஸ் நிலையத்துக்குள் வரும் பெண் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. அதன் உயரத்தை சற்று உயர்த்தினால் நன்றாக இருக்கும். மேலும் நடைமேடைகளில் உள்ள குப்பை கூடைகளை மாற்றுவதுடன் பயணிகளின் இருக்கைகளையும் புதுப்பிக்க வேண்டும்' என்றார்.
====
அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?
சேலம் புதிய பஸ் நிலைய ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகள் கூறும் போது, 'பஸ் நிலையத்தில் உயர் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி நடைமேடைகளில் (பிளாட்பாரங்கள்) கடைகள் வைத்திருந்தவர்களுக்கு அபராதம் விதித்ததுடன் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் திரும்ப, திரும்ப அதே செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பயணிகளின் கோரிக்கைகளையும், பஸ் நிலையத்தில் உள்ள குறைபாடுகளும் விரைவில் தீர்க்கப்படும்' என்றனர்.
===