திருவாரூரில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுமா?- பயணிகள்


திருவாரூரில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுமா?- பயணிகள்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்கு திருவாரூரில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திருவாரூர்

சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்கு திருவாரூரில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பழமை வாய்ந்த ரெயில் நிலையம்

திருவாரூர் ரெயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் நீளமான ரெயில் நிலையமாகும். திருவாரூர் வழியாக ஆரம்பத்தில் மீட்டர் கேஜ் ரெயில் மட்டும் சென்று வந்த நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது.

திருவாரூர் வழியாக நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு பாசஞ்சர் ரெயில்களும், காரைக்காலில் இருந்து எர்ணாகுளம், காரைக்காலில் இருந்து சென்னை, மன்னார்குடியில் இருந்து சென்னை ஆகிய இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

7 நடை மேடைகள்

திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் பிரசித்திப்பெற்ற கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். ரெயில் பயணம் நேரம் மற்றும் கட்டணம் குறைவு ஆகிய காரணங்களால் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை விரும்புகின்றனர்.

திருவாரூர் ரெயில் நிலையத்தில் மொத்தம் 7 நடைமேடைகள் உள்ளன. அவற்றில் 5 நடைமேடைகள் வழியாக பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 2 நடைமேடைகள் சரக்கு ரெயில்கள் வந்து செல்லவும், சரக்குகளை ஏற்றி இறக்கவும் பயன்படுகின்றன.

மொபைல் கேட் கீப்பர்

இந்த ரெயில் நிலையத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.3 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. திருவாரூர் வழியாக தமிழகத்தின் பல்வேறு மார்க்கங்களை இணைக்கும் வகையில் வழித்தடம் உள்ளது. ஆனால் போதிய ரெயில்கள் திருவாரூரில் இருந்து இயக்கப்படுவதில்லை.

திருவாரூர்-காரைக்குடி அகலப்பாதையாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆன பிறகும் போதிய கேட் கீப்பர்கள் நியமிக்கப்படாததால் மொபைல் கேட் கீப்பர்கள் உதவியுடன் 'டெமு' ரெயில் மட்டுமே இயக்கப்படுகிறது.

ஆனால் சரக்கு, எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படவில்லை. இந்த பாதைக்கு எந்த வித வசதிகளும் இல்லாததால் ரெயில் சேவை அதிகரிக்கவில்லை. இந்த பாதையில் கேட் கீப்பர்கள் போதிய அளவு நியமிக்கப்பட்டால் ரெயில் பயண நேரம் குறைவதோடு கூடுதல் ரெயில் சேவை கிடைக்கும் என்றும், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வரும் ரெயில்களை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூரில் இருந்து இயக்கப்படுவதில்லை

இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், நீண்ட நடைமேடையை கொண்ட ரெயில் நிலையங்களில் திருவாரூர் ரெயில் நிலையமும் ஒன்று. மாவட்ட தலைநகரமான திருவாரூரில் இருந்து எந்த ஒரு ரெயிலும் இயக்கப்படுவதில்லை. மற்ற ஊர்களில் இருந்து திருவாரூர் வழியாக சென்னை உள்ளிட்ட பிறமாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் திருவாரூரில் இருந்து சென்னை போன்ற ஊர்களுக்கு செல்ல தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நேரம் விரயம் ஏற்படுவதோடு, வீண் அலைச்சல் ஏற்படுகிறது. திருவாரூரில் இருந்து மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக எந்த ஒரு ரெயிலும் இயக்கப்படவில்லை.

பயணிகளுக்கு வசதி

திருவாரூர் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரெயில்களும் சீசன் முடிந்தவுடன் நிறுத்தப்படுகிறது. இதனால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அவதிப்படுகிறார்கள். திருவாரூர் வழியாக நாள் ஒன்றுக்கு 32 ரெயில்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்குவது போல் திருவாரூரில் இருந்தும் திருவாரூர் வழியாகவும் மற்ற ஊர்களுக்கு போதிய அளவு ரெயில்கள் இயக்கினால் ரெயில்வேக்கு வருமானம் அதிகரிப்பதோடு, பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்றனர்.

தயாராகும் 'லிப்ட்'

திருவாரூர் ரெயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் இருந்து மற்ற நடைமேடைகளுக்கு செல்ல நடைமேடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்டபடிகளை கொண்டுள்ளதால் இதன் மேல் ஏறி மற்ற நடைமேடைக்கு சென்று ரெயில் ஏறுவதற்கு முதியவர்கள், சிறுவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் முதல் நடைமேடை, 2 மற்றும் 3-வது நடைமேடை, 4 மற்றும் 5-வது நடைமேடைக்கு செல்ல 'லிப்ட்' வசதி ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. படி ஏறி சென்று வர முதியவர்கள் சிரமப்படுவதால் 'லிப்ட்' அமைக்கும் பணியை துரிதப்படுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடைமேடை நீட்டிப்பு பணிகள்

2,3,4,5 ஆகிய நடைமேடைகளில் தலா 2 இடங்களில் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல் நடைமேடையில் நிழற்குடை 1 இடத்தில் மட்டுமே இருந்தது. தற்போது முதலாவது நடைமேடையில் கூடுதலாக ஒரு நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது. 1 கழிவறை மட்டுமே இருந்த நிலையில் தற்போது முதலாவது நடைமேடையில் இருப்பு பாதை போலீஸ் நிலையம் அருகேயும், 2-வது நடைமேடையிலும் கட்டண கழிவறை அமைக்கப்பட்டு குத்தகைக்காக காத்திருக்கிறது. ஏற்கனவே நீளமாக உள்ள 2-வது நடைமேடையை கூடுதலாக நீட்டிக்கும் பணி நடந்து வருகிறது.

ஏ.டி.எம். அமைக்க நடவடிக்கை

தற்போது முதல் நடைமேடையில் மட்டும் தான் ரெயில் எண், நேரம், நிலையத்தின் பெயர் மற்றும் ரெயில் செல்லும் வழிகள் ஆகியவற்றை அறிவிக்கும் எல்.இ.டி. அறிவிப்பு பலகை உள்ளது. மற்ற நடைமேடைகளிலும் எல்.இ.டி.அறிவிப்பு பலகை அமைக்கப்பட உள்ளது. மேலும் ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story