பயணிகள் திடீர் மறியல்


பயணிகள் திடீர் மறியல்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:15:11+05:30)

செஞ்சியில் நடுவழியில் பஸ்சை நிறுத்தி ஜப்தி செய்ததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் திடீர் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

விழுப்புரம்

செஞ்சி

விபத்தில் பலி

செஞ்சியை சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி நீலவேணி(வயது 60). இவர் கடந்த 2011-ம் ஆண்டு செஞ்சி-திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே நடந்து சென்ற போது அரசு பஸ் மோதி இறந்தார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இதில் விபத்தில் பலியான நீலவேணி குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து கழகத்திடம் நஷ்ட ஈடு கேட்டு அவரது மகன் கலியபெருமாள் வக்கீல் சின்னையா வீரப்பன் மூலம் செஞ்சி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விபத்தில் பலியான நீலவேணி குடும்பத்துக்கு ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க அரசு போக்குவரத்துக்கு கடந்த 2019-ல் உத்தரவிட்டார்.

கோர்ட்டு உத்தரவு

ஆனால் இதுவரை நஷ்ட ஈடு வழங்காததால் நீலவேணி குடும்பத்தினர் நிறைவேற்று மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி நளினகுமார் மேற்படி ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் நஷ்ட ஈட்டு தொகையுடன் வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டும், இல்லை என்றால் அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆனால் இதுவரை நீலவேணி குடும்பத்துக்கு அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈட்டு தொகையை வழங்காததால் கோர்ட்டு கட்டளை நிறைவேற்றுனர் தலைமையில் ஊழியர்கள் அரசு பஸ்சை ஜப்தி செய்வதற்காக செஞ்சி கூட்டு ரோட்டில் நின்று கொண்டிருந்தனர். அதன்படி நேற்று சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

சாலை மறியல்

இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரையும் ஊழியர்கள் கீழே இறக்கி விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் எங்களை நடுவழியில் இறக்கி விட்டால் எப்படி? என்று கூறி திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த செஞ்சி துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் பயணிகளை சமாதானம் செய்து மாற்று பஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் செஞ்சி சார்பு நீதிமன்ற வளாகத்தில் கொண்டு நிறுத்தி வைத்தனர்.

நடுவழியில் பஸ்சை ஜப்தி செய்ததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் செஞ்சியில் பெரும் பரபரப்பட்டது.


Next Story