குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் வராததால் பயணிகள் அவதி


குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் வராததால் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூருக்கு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, முறையாக பஸ்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூருக்கு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, முறையாக பஸ்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேரக்காப்பாளர் அறை

கூடலூரில் இருந்து நாடுகாணி, தேவாலா, சேரம்பாடி, மேப்பாடி வழியாக கோழிக்கோட்டிற்கும், சேரம்பாடி, சுங்கம், கையுன்னி, எருமாடு, தாளூர் வழியாக சுல்தான்பத்தேரிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பந்தலூர் பஜார் உள்ளது. இதனால் கூடலூர் போக்குவரத்து கழக கிளையில் இருந்து பந்தலூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஜாரில் தாலுகா அலுவலகம், கருவூலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசு, தனியார் பள்ளிகள், வங்கிகள், அரசு ஆஸ்பத்தி உள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பிற தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள், கேரள மாநில பயணிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் பந்தலூருக்கு வந்து செல்கின்றனர்.

அவர்கள் பஸ்சுக்காக பந்தலூர் பஸ் நிலையத்தில் காத்து கிடக்கின்றனர். இந்தநிலையில் அங்குள்ள நேரக்காப்பாளர் அறை மூடப்பட்டு பூட்டியே கிடக்கிறது. அங்கு நேரக்காப்பாளரும் இல்லை.

பயணிகள் அவதி

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் கூடலூர் போக்குவரத்து கழக கிளையில் போதிய டிரைவர், கண்டக்டர்கள் இல்லை.

இதனால் சரியான நேரத்திற்கு அரசு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு வருவது இல்லை. சில டிரைவர்கள், கண்டக்டர்கள் தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் பணிபுரிந்து வருகின்றனர். பஸ் வரும் அல்லது இயக்கப்படும் நேரம் கேட்கலாம் என்றால், நேரக்காப்பாளரும் இல்லை. இதனால் 2 மாநில பயணிகள், மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் வராததால், இரவு நேரங்களில் வீடு திரும்பும் பயணிகள், மாணவ-மாணவிகளை காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது.

இதனால் அவதியடைந்து வருகிறோம். இரவு நேரங்களிலும் நேரக்காப்பாளர் இல்லாததால், இரவு நேர பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வருவது இல்லை. எனவே, நேரக்காப்பாளரை நியமித்து அறையை திறக்கவும், முறையாக பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த பஸ்களுக்கு மாற்றாக புதிய பஸ்களை இயக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story