போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி
குன்னூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதியடைந்தனர்.
குன்னூர்,
குன்னூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதியடைந்தனர்.
தொடர் விடுமுறை
தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் ஆயுத பூஜையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டிக்கு அடுத்து, குன்னூர் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. குன்னூரை சுற்றியுள்ள தேயிலை எஸ்டேட்டுகள் மற்றும் சில கிராமப்புறங்களில் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள். அவர்கள் ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் மற்றும் திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல், மாணவ-மாணவிகள் பள்ளிக் கல்வியை முடித்த பின்பு உயர்கல்விக்காக நீலகிரியில் இருந்து கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு சென்று தங்கி படித்து வருகிறார்கள். அவர்கள் விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு வந்து விட்டு, விடுமுறை முடிந்த பின்னர் கல்லூரிகளுக்கு திரும்புகின்றனர். பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை போன்ற இடங்களுக்கு குறைவான பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
பயணிகள் அவதி
பெரும்பாலான பஸ்கள் ஊட்டியில் இருந்து தான் சமவெளி பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த பஸ்கள் ஊட்டியில் இருந்து வரும் போதே பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் குன்னூர் வெளியூர் பஸ் நிலையத்தில் நிற்கும் பயணிகள் அடித்து பிடித்து ஏறினாலும் நின்று கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. குழந்தைகள், முதியோர்களுடன் உள்ள பயணிகள் கூட்டம் குறைவாக உள்ள பஸ் வருமா என்று எதிர்பார்த்து கால்கடுக்க நிற்கிறார்கள்.
குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை உள்பட பிற இடங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
இதனால் சில பயணிகள் வெகு நேரம் காத்திருந்து விட்டு, குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வாடகை வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து சென்று வருகின்றனர். எனவே, குன்னூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.