புதிய பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீரால் பயணிகள் அவதி
நாகை புதிய பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீரால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிப்பாளையம்:
நாகை புதிய பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீரால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
நாகை-நாகூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நாகை புதிய பஸ் நிலையத்தில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருகிறது.
இந்த கழிவுநீர் பஸ் நிலையம் முழுவதும் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
பயணிகள் அவதி
இந்த கழிவுநீரை கடந்து தான் பயணிகள் பஸ்களில் ஏறி செல்லும் நிலை உள்ளது. அப்போது வாகனங்கள் வந்தால் பயணிகள் மீது கழிவுநீர் படுவதால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பஸ் நிலையங்களில் கடை வைத்துள்ள வியாபாரிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தொற்று நோய்
பஸ்நிலையத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுகள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்து பஸ் நிலையத்தில் கழிவுநீர் வழிந்து ஓடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.