பழைய பஸ் நிலையத்தில் நடுரோட்டில் நின்று பஸ் ஏறும் பயணிகள்
பழைய பஸ் நிலையத்தில் நடுரோட்டில் நின்று பஸ் ஏறும் பயணிகள்
திருப்பூர்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூரில் மேம்படுத்தப்பட்ட பழைய பஸ் நிலையத்தின் கட்டுமான பணி நடந்து வருகிறது. தற்போது கட்டுமான பணிக்காக பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் பகுதி முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
திறப்பு விழா தாமதம்
திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்கனவே இருந்த பஸ் நிலையம் இடிக்கப்பட்டு அங்கு மேம்படுத்தப்பட்ட பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆனால் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு விட்ட நிலையில் பஸ் நிலையத்தை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே பஸ் நிலையம் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்தது. ஆனால், இன்னமும் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. திருப்பூர் மாநகர போக்குவரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த பஸ் நிலையம் உள்ளது. தற்போது இந்த பஸ் நிலையத்தில் இருந்து பல்லடம், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, கொடுவாய், காங்கேயம், அவினாசி, பெருமாநல்லூர், சோமனூர், மேட்டுப்பாளையம், குன்னத்தூர் நம்பியூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம் உள்பட பல இடங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான அரசு பஸ்கள் செல்கின்றன.
நடுரோட்டில் பயணிகள்
இது தவிர தனியார் பஸ்கள், மினி பஸ்களும் அதிக அளவில் இங்கிருந்து செல்கின்றன. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் கட்டுமான பணி நடந்து வந்த போதிலும், சமீப காலமாக பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது பஸ் நிலையத்தின் அலங்கார வளைவு அமைக்கும் பணி நடந்து வருவதால் பஸ் நிலையத்திற்குள் எந்த பஸ்களும் செல்ல முடியாத வகையில் பஸ் நிலையத்தின் முகப்பு பகுதி அடைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இங்கு அனைத்து பஸ்களும் ரோட்டில் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றி செல்லப்படுகின்றனர். ஏற்கனவே திருப்பூரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் பஸ்கள் அனைத்தும் ரோட்டில் நிறுத்தப்படுவதால் இங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பெரும்பாலான நேரங்களில் பயணிகள் நடுரோட்டில் நின்று பஸ் ஏறும் அவலம் உள்ளது. பரபரப்பாக செல்லும் பஸ்களுக்கிடையே நின்றவாறு பயணிகள் ஆபத்தான வகையில் பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.
விரைந்து முடிக்க வேண்டும்
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிக அளவில் வருகின்றன. இதேபோல், மாணவ, மாணவிகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்பவர்கள், அலுவலக பணிக்கு வந்து செல்பவர்களின் வாகனங்களும் ரோட்டில் குவிகின்றன. இது ஒருபுறமிருக்க, தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கடை வீதிக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் தீவிரமாக பணி புரிகின்றனர். ஆனாலும் வாகனங்களை ஒழுங்குபடுத்த முடியாமல் அவர்கள் திணறுகின்றனர். இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஒருபுறமிருக்க, தற்போது பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால், எந்த ஊருக்கு எந்த பஸ் செல்லும் என தெரியாமல் பயணிகள் தங்கள் ஊருக்கான பஸ்சை தேடி அங்குமிங்குமாக அலைகின்றனர். சில நேரங்களில் பயணிகள் ஓடி, ஓடி பஸ் ஏறக்கூடிய அவல நிலையும் உள்ளது. எனவே குழப்பத்துடனும், பாதுகாப்பின்றியும், சிரமத்துடன் பஸ் ஏறி செல்லும் பயணிகளின் நலன் கருதி பழைய பஸ் நிலையத்தின் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர். பண்டிகை காலம் என்பதால் இதில் இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?.
---