நள்ளிரவில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம்


நள்ளிரவில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம்
x

அய்யன்கொல்லிக்கு வர வேண்டிய அரசு பஸ் பாதி வழியில் திரும்பி சென்றது. இதனால் நள்ளிரவில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நீலகிரி

பந்தலூர்,

அய்யன்கொல்லிக்கு வர வேண்டிய அரசு பஸ் பாதி வழியில் திரும்பி சென்றது. இதனால் நள்ளிரவில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

அரசு பஸ்கள்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லிக்கு கூடலூர், பந்தலூர், கொளப்பள்ளி வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கிடையே அடிக்கடி சில பஸ்கள் கொளப்பள்ளி வரை வந்து திரும்பி செல்கின்றன. இதனால் குறிஞ்சி நகர், மழவன் சேரம்பாடி, கொளப்பள்ளி டேன்டீ உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் காட்டு யானைகள் நடமாடும் பகுதிகள் வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. கூடலூரில் இருந்து தேவாலா, பந்தலூர், கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, தாளூர், சேரம்பாடி வழியாக கோவைக்கு இரவு 8 மணிக்கு அரசு பஸ் செல்கிறது.

குழந்தைகளுடன் காத்திருந்தனர்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி ஆகியும் அய்யன்கொல்லிக்கு பஸ் வரவில்லை. இதனால் கோவைக்கு செல்ல வேண்டிய பயணிகள் கையில் குழந்தைகளுடன், நிழற்குடையில் 2 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்தனர். அத்திசால், கள்ளிச்சால், தாளூர், எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாடும் அச்சத்தில் பஸ்சை எதிர்பார்த்து நின்றனர். ஆனால், கோவைக்கு செல்ல வேண்டிய அரசு பஸ் கொளப்பள்ளி வரை வந்து, அங்கிருந்து திரும்பி சென்றது.

இதனால் நள்ளிரவில் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் வீடுகளுக்கு செல்ல வாகனங்கள் கிடைக்காததால், நடந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, அரசு பஸ் உரிய வழித்தடத்தில் இயக்கப்பட வில்லை. அய்யன்கொல்லியில் இருந்து கோவைக்கு செல்லும் பஸ் பாதி வழியில் திரும்பி சென்றது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதை தடுக்கவும், ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் அரசு பஸ்சை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Next Story