மழைநீர் ஒழுகும் மேற்கூரை; பஸ்சுக்குள் குடைபிடித்தபடி சென்ற பயணிகள்


மழைநீர் ஒழுகும் மேற்கூரை; பஸ்சுக்குள் குடைபிடித்தபடி சென்ற பயணிகள்
x

தாண்டிக்குடியில் பஸ்சின் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகியதால் குடைபிடித்தபடி பயணிகள் பயணம் செய்தனர்.

திண்டுக்கல்

வத்தலக்குண்டுவில் இருந்து அய்யம்பாளையம், சித்தரேவு, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, பெரும்பாறை, தடியன்குடிசை, மங்களம்கொம்பு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் வழியாக தாண்டிக்குடிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று மதியம் வழக்கம்போல் அரசு பஸ் ஒன்று வத்தலக்குண்டுவில் இருந்து தாண்டிக்குடிக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது தாண்டிக்குடி, பெரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. தாண்டிக்குடி அருகே அந்த பஸ் வந்தபோது, பஸ்சின் மேற்கூரை வழியாக மழைநீர் உள்ளே ஒழுகியபடி இருந்தது. இதனால் பஸ்சில் வந்த பயணிகள் மழைநீரில் நனைந்தபடியே பயணம் செய்தனர். ஒருசிலர் பஸ்சுக்குள் குடைபிடித்தபடி பயணம் செய்தனர். ஓட்டை, உடைசலான பஸ்களில் சிரமத்துடன் பயணிக்க வேண்டி நிலை உள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வத்தலக்குண்டு, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான தாண்டிக்குடி, மஞ்சள்பரப்பு, பெரும்பாறை, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை, உடைசலுடன் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே மலைக்கிராமங்களுக்கு தரமான பஸ்களை இயக்க வேண்டும் என்றனர்.



Next Story