வேப்பங்கொட்டைகளை ஆர்வத்துடன்சேகரித்து விற்கும் பெண்கள்


வேப்பங்கொட்டைகளை ஆர்வத்துடன்சேகரித்து விற்கும் பெண்கள்
x
தினத்தந்தி 21 Aug 2023 12:15 AM IST (Updated: 21 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் வேப்பங்கொட்டைகளை ஆர்வத்துடன் பெண்கள் சேரிகரித்து வருகிறார்கள். குடும்ப செலவுகளுக்கு கை கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

ராமநாதபுரம்

தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் வேப்பங்கொட்டைகளை ஆர்வத்துடன் பெண்கள் சேரிகரித்து வருகிறார்கள். குடும்ப செலவுகளுக்கு கை கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

மருத்துவ குணம்

இயற்கையாகவே வேப்பமரம் மருத்துவ குணம் கொண்டது. வேப்ப மரங்களில் கொழுந்தாக உள்ள இலைகளை மருந்தாகவும் தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நிழல் தரும் மரமாக இருப்பது மட்டுமல்லாமல் நல்ல ஒரு கிருமி நாசினியாகவும் இருக்கிறது. வேப்பமரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வேப்பங்கொட்டைகள் மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கும், வேப்ப எண்ணெய் தயாரிப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

அதுபோல் வேப்ப மரத்தில் இருந்து விழும் வேப்பம்பழங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சேகரித்து அதை கடைகளில் கொடுத்து பணம் பெற்று வருகிறார்கள்.

கிலோ ரூ.100-க்கு விற்பனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், சாயல்குடி, முதுகுளத்தூர், கடலாடி, ஆர்.எஸ்.மங்கலம், பாம்பன் உள்ளிட்ட ஊர்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது வேப்பங்கொட்டைகள் சேகரிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்கள் சேகரிக்கும் வேப்பங்கொட்டைகளை பல வியாபாரிகள் அந்த பகுதிகளுக்கே நேரில் சென்று சேகரித்தும் வாங்கியும் செல்கின்றனர். அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் நேரடியாக கடைகளுக்கு கொண்டு சென்று வேப்பங்கொட்டைகளை கொடுத்தும் பணம் பெறுகின்றனர். தற்போது 1 கிலோ வேப்பங்கொட்டை ரூ.100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்த லட்சுமி கூறியதாவது:-

மருந்து பொருட்கள் தயாரிப்பு

ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் வேப்பங்கொட்டை சீசன் ஆகும். பருவமழை சீசனில் மழையே பெய்யாததால் இந்த ஆண்டு வேப்பம்பழம் மரத்தில் அந்த அளவுக்கு காய்க்கவில்லை என்று சொல்லலாம். கடந்த ஆண்டு சீசனில் வேப்பம்பழம் காய்ப்பு அதிகமாகவே இருந்தது. அதுபோல் கடந்த ஆண்டு 1 கிலோ ரூ.120 வரை விலை போனது. ஆனால் தற்போது 1 கிலோ வேப்பங்கொட்டை ரூ.100-க்கு மட்டுமே விலை போகின்றது. இந்த வேப்பங்கொட்டைகள் மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கும், பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பதற்கும், வேப்ப எண்ணெய் தயாரிப்பதற்கும் வியாபாரிகள் மூலம் ரசாயன கம்பெனிகளுக்கு அனுப்பப்படுகின்றது. பல ஊர்களில் வேம்பு உள்ளிட்ட பல வகையான மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு வரும் நிலையில் கிராமங்களில் தான் ஓரளவு வேப்பமரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இல்லத்தரசிகள் இந்த வேப்பங்கொட்டைகளை விற்பனை செய்து அன்றாட குடும்ப செலவுகளையும் சமாளித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story