எட்டயபுரம் அருகே பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எட்டயபுரம் அருகே பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள அயன்ராசாப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் சமீபத்தில் திருப்பணிகள் நடைபெற்றது. நேற்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 6 மணி அளவில் பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 8 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கிய விழா சிறப்பு பூஜைகள் செய்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. இதையெடுத்து மேளதாளம் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலின் விமான கோபரங்களுக்கு ஊற்றப்பட்டு, தீபாரதனையுடன் கும்பிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து பத்திரகாளியம்மன், மாரியம்மனுக்கு பால், மஞ்சள், திருநீறு உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.