அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி
கூடலூர், பந்தலூரில் உள்ள தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்,
கூடலூர், பந்தலூரில் உள்ள தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
டாக்டர்கள் பணியிடங்கள் காலி
கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் கூடலூரில் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள், கர்ப்பிணிகள் அவசர காலங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர், குழந்தை, பெண், கண் சிகிச்சை டாக்டர்கள் உள்பட 17 டாக்டர்கள் பணியிடங்கள் உள்ளது. இந்த நிலையில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். அவரும் பயிற்சிக்காக வெளியூர் சென்று விட்டார். இதனால் அனைத்து பணியிடங்களும் காலியாக இருக்கிறது. இதன் காரணமாக நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
நோயாளிகள் ஏமாற்றம்
இதன் காரணமாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் சாதாரண மற்றும் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை ஊட்டிக்கு அனுப்பி வருகின்றனர். கூடலூரில் இருந்து ஊட்டிக்கு 52 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளதாலும், உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமலும் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். சில சமயங்களில் கர்ப்பிணிகளுக்கு நடுவழியில் பாதுகாப்பின்றி குழந்தை பிறந்து விடுகிறது.
இதனால் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போதுமான டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதைத்தொடர்ந்து குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 2 டாக்டர்கள் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். ஆனால், நோயாளிகள் வரும் சமயத்தில் சிகிச்சை அளிக்க முடிவதில்லை. இதனால் ஏமாற்றத்துடன் நோயாளிகள் திரும்பிச் செல்கின்றனர்.
இதேபோல் பந்தலூர் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரியில் 5 டாக்டர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இதில் ஒரு டாக்டர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.
நிரப்ப வேண்டும்
இதன் காரணமாக பந்தலூர் தாலுகா பகுதி மக்கள் கேரளா மாநிலத்திற்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இதனால் எந்த சிகிச்சையும் பெற முடியவில்லை. எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றனர்.
இதுகுறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்ட போது, சமவெளியில் இருந்து கூடலூர் பகுதியில் பணியாற்ற டாக்டர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அவ்வாறு சில மாதங்கள் மட்டுமே பணியாற்றும் டாக்டர்கள் பணியிட மாறுதல் பெற்று சென்று விடுகின்றனர்.
தற்போது கூடலூர், பந்தலூர் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்ற டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் விரைவில் பணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.