புரவி எடுப்பு திருவிழா
மானாமதுரை அருகே புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
மானாமதுரை,
மானாமதுரை அருகே நத்தபுரக்கி கிராமத்தில் ஸ்ரீகாட்டூரணி இளங்காருடைய அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதையொட்டி நத்தபுரக்கி, வலசை, கண்மாய்பட்டி ஆகிய கிராம மக்கள் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், திருமணமாகாத ஆண்கள், பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டியும் அய்யனாரை வேண்டி புரவி எடுப்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு நத்தபுரக்கி, வலசை, கண்மாய்பட்டி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிராமத்திலிருந்து ஊர்வலமாக மானாமதுரைக்கு வந்தனர்.
அங்கு தயார் நிலையில் செய்து வைக்கப்பட்டிருந்த புரவிகளுக்கும் பொம்மைகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் மானாமதுரையில் இருந்து நத்தபுரக்கி கிராமத்திற்கு சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக நடந்து சென்று அய்யனார் கோவிலை சென்றடைந்தது.
இந்நிலையில் கிராம மக்கள் புரவிகள் எடுத்து ஊருக்குள் வந்து கொண்டிருக்கும் போதே கன மழை பெய்தது.இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.