பழையூர் கிராமத்தை சேர்ந்த 17 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா-80 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வு
தர்மபுரி:
பென்னாகரம் தாலுகா கெண்டேயனஅள்ளி ஊராட்சி பழையூர் கிராமத்தில் வசிக்கும் 17 குடும்பத்தினர் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 80 ஆண்டுகளாக கோரிக்கை மனு கொடுத்தும் பயனில்லாமல் போராடி வந்தனர். இந்தநிலையில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றியம் வாரியாக பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார். அப்போது பழையூர் கிராம மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்த மனுக்கள் மீது பரிசீலனை நடத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பழையூர் கிராமத்தை சேர்ந்த 17 பேருக்கு வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளை கலெக்டர் சாந்தி வழங்கினார். கடந்த 80 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வு காணும் விதமாக இலவச வீட்டுமனை பட்டா கிடைத்த மகிழ்ச்சியில் அந்த கிராம மக்கள் அரசுக்கும், கலெக்டருக்கும் நன்றி தெரிவித்தனர்.