குடியாத்தம் நகருக்குள் தண்ணீர் தேடி வந்த புள்ளிமான்
குடியாத்தம் நகருக்குள் தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை பொதுமக்கள் மீட்டனர்.
குடியாத்தம் நகரம் மொய்தீன்பேட்டை படேல் சாயபூ தெருவில் சம்பவத்தன்று இரவு நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. அப்போது பொதுமக்கள் சென்று பார்த்தபோது நாய்கள் புள்ளிமானை விரட்டிக் கொண்டு வந்தது. பயந்துபோன புள்ளிமான் ஒரு வீட்டுக்குள் நுழைந்தது. பின்னர் பொதுமக்கள் அந்த ஆண் புள்ளி மானை பத்திரமாக மீட்டு குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனச்சரக அலுவலர் வினோபா உத்தரவின் பேரில் வனத்துறையினர் வந்து புள்ளிமானை மீட்டு நள்ளிரவே குடியாத்தம் அருகே கல்லப்பாடி காப்புக்காட்டில் விட்டனர்.
குடியாத்தம் நகரை சுற்றி வனப்பகுதி கிடையாது. சில கிலோமீட்டர் தொலைவில் காப்புக்காடுகளில் புள்ளிமான்கள் உள்ளன. பல கிலோமீட்டர் வந்து குடியாத்தம் நகருக்குள் புள்ளிமான் நுழைந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. காப்பு காடுகளில் கோடை காலத்தில் தண்ணீர் இல்லாததால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.