பட்டுக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் மீது தாக்குதல்
பட்டுக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் மீது தாக்குதல்
பட்டுக்கோட்டை,
பட்டுக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து, 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
தகராறு
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மயில்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் காவலாளியாக கண்டியன் தெருவை சேர்ந்த ரவி (வயது 56) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று ரவி பணியில் இருந்தபோது, அதே ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வரும் வினோத் என்பவருக்கும், வேறு சில நபர்களுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது வினோத்தை தேடி ஆஸ்பத்திரிக்கு வந்த விஜய், முத்துப்பாண்டி, பிரகாஷ் ஆகிய 3 பேரும் ஆஸ்பத்திரி வாசலில் நின்று தகராறில் ஈடுபட்டனர்.
கைது
இதனை காவலாளி ரவி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ரவியை தாக்கி அவருடைய கண்ணாடி, செல்போன் ஆகியவற்றை உடைத்தனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் ரவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேல் நகரை சேர்ந்த மணி மகன் பிரகாஷ் (30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ேமலும் இதில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.