உதவி செய்வது போல் நடித்து மூதாட்டியிடம் ½ பவுன் நகை பறித்த மர்மநபர்
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் உதவி செய்வது போல் நடித்து மூதாட்டியிடம் ½ பவுன் நகை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த வீரக்கல் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அவருடைய மனைவி அங்கம்மாள் (வயது 65). கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கம்மாள் தனது உறவினரை பார்ப்பதற்காக திண்டுக்கல் வந்தார். நேற்று இவர், வீரக்கல்லுக்கு திரும்பி செல்வதற்காக திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது பஸ்சுக்காக மூதாட்டி காத்திருப்பதை பார்த்த மர்மநபர் ஒருவர், அவர் அருகே சென்று நைசாக பேச்சுக்கொடுத்தார். அப்போது வீரக்கல் செல்லும் பஸ்சில் தன்னை ஏற்றிவிடும்படி அந்த நபரிடம் அங்கம்மாள் தெரிவித்தார். உடனே அந்த நபரும் தான் உதவி செய்வதாக கூறி மூதாட்டியை அழைத்துக்கொண்டு வேடசந்தூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடைக்கு அழைத்துச்சென்றார்.
பின்னர் அங்கு பயணிகள் இன்றி நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ்சில் ஏறும்படி மூதாட்டியை வற்புத்தினார். இதில் சந்தேகமடைந்த மூதாட்டி, அந்த பஸ்சில் ஏற மறுப்பு தெரிவித்தார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் மூதாட்டியின் காதில் அணிந்திருந்த ½ பவுன் தங்க கம்மலை பறித்துக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். நகையை பறித்ததில் மூதாட்டியின் காது கிழிந்தது. இதனால் வலியால் அவர் அலறி துடித்தார். அந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் நகையை பறித்துச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.