ரூ.74¾ லட்சத்தில் 'பேவர் பிளாக்' சாலை பணிகள் தொடக்கம்
ரூ.74¾ லட்சத்தில் ‘பேவர் பிளாக்’ சாலை பணிகள் தொடங்கி உள்ளன.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் 'பேவர் பிளாக்' சாலைகள் அமைப்பதற்காக 2022-2023-ம் ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.74 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி பேரூராட்சிக்கு உட்பட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு பின்புறம் முதல் மருதங்காவெளி மாரியம்மன் கோவில் வழியாக செல்லும் இணைப்பு சாலை வரை உள்ள பகுதியில் சாலை பணிகள் நேற்று தொடங்கின. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பேரூராட்சி கவுன்சிலர் லட்சுமி செல்வம் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் சாலை பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் சிவஅய்யப்பன், பேரூராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், பாலசுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் மோகன், தி.மு.க. நிர்வாகிகள் அய்யப்பன், சபான், முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.