பாவூர்சத்திரம் அரசு பள்ளி மைதானம் சீரமைப்பு
பாவூர்சத்திரம் அரசு பள்ளி மைதானம் பள்ளமாக இருந்ததால், அதை மண்ணால் நிரப்பி சீரமைக்கப்படடது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,750 மாணவிகள் படித்து வருகின்றனர். நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பள்ளி மைதானமானது பள்ளமாக காணப்படுவதால் தற்போது மழை பெய்தபோது அங்கு தண்ணீர் தேங்கி மாணவிகள், ஆசிரியர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி மற்றும் ஆசிரியர்கள், நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் மூலம் சாலைப்பணியில் ஈடுபட்டு வரும் பி அண்ட் சி நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர்கள் மூலம் பள்ளமாக கிடந்த மைதானத்துக்கு மண் நிரப்ப ஏற்பாடு செய்தனர். அதன்படி பள்ளி நுழைவு வாயில் மற்றும் மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்காத வண்ணம் மணல் நிரப்பப்பட்டது. மேலும் இப்பள்ளி புதிய கட்டிடத்தின் அருகில் புதர் போல் மண்டி கிடந்த செடிகளை அகற்றியதுடன், அப்பகுதியில் சரல் மண் நிரப்ப ஏற்பாடு செய்வதாகவும் அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், பி அண்ட் சி நிறுவன மேலாளர் கென்னடி ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், நினைவுப்பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் சிவபார்வதிநாதன், ஆசிரியை ஜெகதா, ஆசிரியர் மில்டன், அலுவலக பணியாளர் பீட்டர் ஆரோக்கியசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் அருணோதயம், நாராயணசிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.