ஜான் சல்லிவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஜான் சல்லிவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஊட்டி,
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் 1819-ம் ஆண்டு நீலகிரியை கண்டறிந்தார். கன்னேரிமுக்கு கிராம பகுதியில் உள்ளூர் மக்கள் உதவியுடன் கற்களால் ஆன வீடு ஒன்றை கட்டினார். அந்த வீட்டை தனது அதிகாரபூர்வ பங்களாவாகவும், அலுவலகமாகவும் பயன்படுத்தினார். அங்கிருந்தவாறு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் செய்து வந்தார். நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டராக ஜான் சல்லிவன் பொறுப்பேற்று 10 ஆண்டுகள் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் ஊட்டி நகரம் மற்றும் ஏரியை உருவாக்கினார். ஊட்டியை உருவாக்கியவரும், நீலகிரி மாவட்ட முதல் கலெக்டரான ஜான் சல்லிவனை நினைவுகூரும் வகையில், ஊட்டியின் 200-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்தநிலையில் ஜான் சல்லிவன் 168-வது நினைவு நாளையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஜான் சல்லிவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கலெக்டர் அம்ரித், ஆர்.டி.ஓ. (பொறுப்பு) முகமது குதரதுல்லா, நகராட்சி என்ஜினீயர் கோபிகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன், தாசில்தார் ராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஜான் சல்லிவன் நினைவு தினத்தையொட்டி கன்னேரிமுக்கு கிராமத்தில் உள்ள அவரது நினைவகத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, தாசில்தார் காயத்ரி, செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உள்பட கோத்தகிரி பேரூராட்சி உறுப்பினர்கள், ஜான் சல்லிவன் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.