சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்
சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
தட்டார்மடம்:
கன்னடியன் கால்வாய் திட்டப்பணிகளுக்கு விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் மாற்றுப் பாதையில் கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சாத்தான்குளம் தாலுகா அரசூர் பகுதி விவசாயிகள் நாளை (திங்கட்கிழமை) முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தாசில்தார் தங்கையா, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சூர்யா, தட்டார்மடம் சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது ரஹீம், வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாய சங்க தலைவர் இடைச்சிவிளை கணேசன், பொருளாளர் தங்கம்மாள்புரம் முருகேசன், செயலாளர் கீரைக்காரன்தட்டு சுப்பிரமணியன் மற்றும் போராட்டக் குழுவினர் கமலம், பூங்கனி, மணிகண்டன், பட்டுதுரை, அருள்வேல், சுயம்புலிங்கம், ராஜவேல், வி.ஏ.ஓ.க்கள் அரசூர் ஒன்று பால்குமார், அரசூர் இரண்டு ஆனந்த், நடுவக்குறிச்சி செந்தில்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலங்களை தவிர்த்து பிற பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒரு வாரத்திற்குள் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் தெரிவித்தார். அதனை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் ஒத்திவைத்தனர்.