குளச்சலில் மீனவர் வலையில் சிக்கிய 'மயில் மீன்';ரூ.10,500-க்கு ஏலம் போனது
குளச்சலில் மீனவர் வலையில் சிக்கிய மயில் மீன் ரூ.10,500-க்கு ஏலம் போனது.
குளச்சல்,
குளச்சலில் மீனவர் வலையில் சிக்கிய மயில் மீன் ரூ.10,500-க்கு ஏலம் போனது.
கட்டுமர மீனவர்கள்
குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமர, வள்ளம் மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். தற்போது 61 நாட்கள் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கட்டுமரம், பைபர் வள்ள மீனவர்களே மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் வானிலை ஆய்வுமைய எச்சரிக்கையால் கடந்த சில நாட்களாக கட்டுமர, வள்ள மீனவர்களும் அதிகமாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் குறைந்த அளவே மீன்கள் கிடைத்து வருகின்றன.
மயில் மீன்
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் கடலுக்கு சென்று திரும்பிய கட்டுமரங்கள், வள்ளங்களில் நவரை, அயலை, சூரை, வாளை போன்ற சிறிய வகை மீன்கள் குறைந்த அளவே கிடைத்தன. இதனால் மீன் விலை அதிகரித்து. குறிப்பாக நவரை ஒரு கூடை ரூ.900 முதல் ரூ1,200 வரையும், 2 அயலை மீன் ரூ. 200-க்கும், ஒரு சூரை மீன் ரூ. 200-க்கும், ஒரு நெய்மீன் சூரை ரூ. 700 ரூபாய் வரையும், ஒரு வாளை மீன் ரூ.100-க்கும் விலை போனது.
இதற்கிடைேய ஒரு மீனவர் வலையில் 'மயில் மீன்' சிக்கி இருந்தது. அவற்றை ஏலம் எடுக்க வியாபாரிகள் போட்டிபோட்டனர். இறுதியில் அந்த மீன் ரூ.10,500-க்கு ஏலம் போனது.
மீன் விலை உயர்வால் துறைமுகத்திற்கு வந்த வியாபாரிகளும், மீன் பிரியர்களும் அதிர்ச்சியுடன் திரும்பி சென்றனர். மேலும் விசைப்படகுகள் மீன்பிடிக்க தொடங்கினால்தான் மீன்கள் வரத்து அதிகரித்து விலை குறையும் என்று மீனவர்கள் கூறினர்.