மண்டை ஓடு, எலும்புகளுடன் விவசாயிகள் போராட்டம்
மண்டை ஓடு, எலும்புகளுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி ஆற்றில் மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட வேண்டும், விவசாய விளைப் பொருளுக்கு 2 மடங்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
13-ம் நாளான நேற்று மண்டை ஓடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களுக்கு விவசாயிகளின் நிலம், வீடு, விவசாய உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் போன்றவைகளை ஜப்தி செய்து ஏலம் விட்டதால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மண்டைஓடு, எலும்புகளை கையில் ஏந்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். விவசாயிகள் வாங்கிய கடன்களை அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனர். இந்த போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.