தரமற்ற விதை விற்பனையாளர்களுக்கு அபராதம்


தரமற்ற விதை விற்பனையாளர்களுக்கு அபராதம்
x

தரமற்ற விதை விற்பனையாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது

தென்காசி

நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள விதை ஆய்வாளர்கள் நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்கும் பொருட்டு விதை விற்பனை நிலையங்களை தொடர்ந்து ஆய்வு செய்து விதைச் சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். தென்காசி மற்றும் சங்கரன்கோவில் விதை ஆய்வாளர்கள் விதை மாதிரிகளை எடுத்து நெல்லை பரிசோதனை நிலையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்ததில், 6 நெல் விதை மாதிரிகள் தரமற்றது என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தரமற்ற விதைகள் முடக்கப்பட்டது.

மேலும் தென்காசி, ஆலங்குளம் மற்றும் மடத்துபட்டியில் இந்த விதைகளை விற்பனை செய்த விற்பனையாளர்கள் மீது ஆலங்குளம் கோர்ட்டில் 4 வழக்குகளும், தென்காசி கோர்ட்டில் 2 வழக்குகளும் பதியப்பட்டன.

இந்த வழக்கில் தரமற்ற விதைகளை விற்பனை செய்த விற்பனையாளர்கள் மற்றும் கயத்தாறில் உள்ள விதை வினியோகஸ்தர்களுக்கும், பெங்களூரைச் சேர்ந்த விதை உற்பத்தியாளர்களுக்கும் சேர்த்து ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் தொடர்ந்து தரமான விதைகளை மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். தரமற்ற விதைகளை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றங்கள் மூலம் தண்டனை பெற்றுத் தருவதுடன் உரிமம் ரத்து செய்யப்படும். என்று நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story