லாரி உரிமையாளருக்கு தடையில்லா சான்று கொடுக்க மறுத்த தனியார் நிதி நிறுவனத்துக்கு அபராதம்


லாரி உரிமையாளருக்கு தடையில்லா சான்று கொடுக்க மறுத்த தனியார் நிதி நிறுவனத்துக்கு அபராதம்
x

லாரி உரிமையாளருக்கு தடையில்லா சான்று கொடுக்க மறுத்த தனியார் நிதி நிறுவனத்துக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்து தேனி நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தேனி

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு வீதியை சேர்ந்தவர் பரமேஸ்வரர். லாரி உரிமையாளர். இவர் கடந்த 2010-ம் ஆண்டு தேனியில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவன கிளையில் ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் வாகன கடன் பெற்று லாரி வாங்கினார். அதற்கான தவணை தொகையை வட்டியுடன் முழுமையாக செலுத்தி முடித்தார்.

அதன்பிறகு வாகன பதிவு சான்றுக்கான தடையில்லா சான்று வழங்கப்படாமல் இருந்தது. அந்த தடையில்லா சான்று கேட்டபோது மேலும் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அந்த தொகையை செலுத்திய பிறகும் தடையில்லா சான்று கொடுக்காமல் இழுத்தடித்தனர்.

இதையடுத்து தேனியை சேர்ந்த வக்கீல் செல்வக்குமார் மூலம், தேனி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் பரமேஸ்வரர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எதிர்மனுதாரர்களாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் தேனி கிளை மேலாளர், கம்பம் கிளை மேலாளர், சென்னை பொது மேலாளர், மும்பை தலைமை அலுவலக பொது மேலாளர் ஆகியோரை குறிப்பிட்டார். இந்த மனுவின் மீதான விசாரணையை தொடர்ந்து நீதிபதி சுந்தர், உறுப்பினர்கள் ரவி, அசீனா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி, எதிர்மனுதாரர்களான 4 பேரும் கூட்டாக சேர்ந்து, பரமேஸ்வருக்கான வாகன பதிவு சான்றிதழுக்கான தடையில்லா சான்றை ஒரு மாதத்திற்குள் கொடுக்க வேண்டும். மனுதாரரின் மன உளைச்சல், சேவை குறைபாட்டுக்கு ரூ.90 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.20 ஆயிரமும் கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.


Related Tags :
Next Story