15 ஆயிரத்து 176 பேரிடம் ரூ.1.04 கோடி அபராதம் வசூல்
ரெயில்களில் விதிமுறை மீறலில் ஈடுபட்ட 15 ஆயிரத்து 176 பேரிடம் ரூ.1.04 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
சூரமங்கலம்
சேலம் ரெயில்வே கோட்டத்தில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் மற்றும் கட்டணம் செலுத்தாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான லக்கேஜ்கள் கொண்டு செல்வது உள்பட ரெயில்களில் விதிமுறைகள் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா உத்தரவிட்டுள்ளார், இதையொட்டி கடந்த ஏப்ரல் மாதத்தில் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் சேலம் கோட்டம் வழியாக வந்து செல்லும் ரெயில்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள், முன் பதிவு இல்லா ரெயில் டிக்கெட் எடுத்து முன்பதிவு செய்யப்பட்ட ரெயில்களில் பயணம் செய்தவர்கள், அனுமதிக்கப்பட்ட லக்கேஜ்க்கு அதிகமாக லக்கேஜ் கொண்டு சென்றவர்கள் என 15 ஆயிரத்து 176 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது ரெயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்து ரூ.1 கோடியே 4 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து சேலம் ரெயில் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் கூறியதாவது:-
சேலம் ரெயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்ட சோதனையில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 4 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 15 ஆயிரத்து 176 பேர் பிடிபட்டனர். ரெயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்வது தண்டனைக்கு உரியதாகும். அவர்களிடமிருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே டிக்கெட் எடுக்காமல் ரெயில்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் இது போன்ற சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.