விதிமுறைகளை மீறிய 4,798 பேருக்கு ரூ.34 லட்சம் அபராதம் கலெக்டர் சரயு தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறிய 4,798 பேருக்கு ரூ.34 லட்சத்து 4 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் சரயு தெரிவித்தார்.
கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
மோட்டார்சைக்கிளில் செல்பவர்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். இருசக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் செல்லக்கூடாது. கடந்த 6 மாதங்களில் அதி வேகமாக வாகனத்தை இயக்கிய 39 பேருக்கு 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அதிக பாரம் ஏற்றி சென்ற வாகனங்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
4,798 பேருக்கு அபராதம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறிய 4,798 பேருக்கு ரூ.34 லட்சத்து 4 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் நடந்த 279 சாலை விபத்துக்களில் 307 பேர் இறந்துள்ளனர். மேலும் 54 பேர் கை,கால் இழந்தும், 757 பேர் படுகாயமும் அடைந்துள்ளனர். விபத்துகளை குறைக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி விபத்தில்லா கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.